Saturday, February 27, 2016

சர்க்கரையை வெல்லலாம்

சர்க்கரை நோய் வருவதற்கான சராசரி வயது 42.5 ஆக இருந்தது. ஆனால், இப்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இன்றைய காலகட்டத்திலும் சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டாலே சர்க்கரை நோயைத் தவிர்க்க முடியும்.
சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது? கோல்டு ஸ்டாண்டர்டு பரிசோதனை என்ன?

சர்க்கரை அளவு கண்டறியும் எளிய ஸ்டிரிப் பரிசோதனை (Random blood sugar) செய்து, அதில் வரும் மதிப்பை வைத்து, நமக்கு சர்க்கரை நோய் இல்லை என்று மகிழ்ச்சி அடைபவர்கள் பலர். இந்தப் பரிசோதனை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்றுதான் தெரிந்துகொள்ள முடியும். ப்ரீ டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதா என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.  ஏன் ப்ரீ டயாபடீஸ் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என யோசிக்கலாம். இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள் என்றால், மேலும் ஒரு 6.5 கோடி பேருக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது. 

இதை கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால், நம்மால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். இதை எளிய, குறைந்த செலவில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையான குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (Glucose Tolerance Test (GTT)) மூலம் கண்டறியலாம்.

இந்தப் பரிசோதனை செய்ய இரவு உணவு உண்ட பிறகு, 8 முதல் 10 மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது. காபி, டீ கூட எடுத்துக்கொள்ளக் கூடாது. காலையில், வெறும் வயிற்றில் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். முதல் மாதிரி எடுத்ததும், 75 கிராம் அளவுக்கு குளுக்கோஸை, 100 மி.லி நீரில் கலந்து அருந்த வேண்டும். இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை ரத்தப் பரி சோதனை செய்ய வேண்டும்.

இந்த இரண்டு பரிசோதனை முடிவுகளே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, ப்ரீடயாபடீஸ் நிலையில் இருக்கிறாரா, சர்க்கரை நோயாளியா என்று சொல்லிவிடும். பரிசோதனை முடிவுகளை உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார். இருப்பினும், இந்த மதிப்பீடுகள் குறித்த விழிப்புஉணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.
பரிசோதனை முடிவில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறிந்தால் அவர்கள் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டியது இல்லை. ஆனால், ப்ரீ டயாபடீஸ் இருப்பது கண்டறியப் பட்டால், அவர்கள் வாழ்க்கைமுறை மாற்றங் களை மேற்கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் விவரிப்பார். அதைச் சரியாகப் பின்பற்றினாலே, சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். இதை மிகச்சரியாகப் பின்பற்றிய ஏராளமானோர் சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பி உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பரிசோதனையைச்செய்து, சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்ப எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்து உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். இந்தத் தொடரின் முக்கிய நோக்கமே, ‘வரும் முன் காப்போம்’ என்கிற நம்முடைய முதுமொழிக்கு ஏற்ப சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.
ஹெச்.பி.ஏ.1.சி 

ஒருவருக்கு சர்க்கரை நோய் கண்டறிப்பட்டால், அவர்கள் மருத்துவர் பரிந்துரையின்படி தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டறியப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் இருக்கிறதா என்று கண்டறிவது சற்று சிக்கலானதாக இருந்தது. அதாவது, பரிசோதனைக்கு முன்பு இரண்டு, மூன்று நாட்களுக்குக் கட்டுப்பாடாக இருந்து, பரிசோதனை செய்யும்போது அது நார்மல் என்று காட்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் விருப்பம்போல செயல்பட ஆரம்பிப்பார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க வந்ததுதான் ஹெச்.பி.ஏ.1.சி பரிசோதனை. இது, கடந்த மூன்று மாதங்களில் (சராசரியாக 90 நாட்கள்) சர்க்கரை அளவு எப்படி இருந்தது என்று காட்டும். நம்முடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் என்று பல உள்ளன. இதில், சிவப்பு அணுக்களில் கிளைசலேட்டட் ஹீமோகுளோபின் (Glycaslated Haemoglobin) வகை சர்க்கரையைச் சுமந்து செல்லும். இதன் ஆயுள் 90 நாட்கள். பரிசோதனையின்போது, ரத்தத்தை எடுத்து இந்த கிளைசலேட்டட் ஹீமோகுளோபினை பரிசோதனை செய்யும்போது, கடந்த மூன்று மாதங்களின் ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளலாம். குதிரைக்குக் கடிவாளம்போல, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் செய்ய வேண்டும். பரிசோதனையில் மதிப்பு 7-க்கு கீழ் இருந்தால் கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். இதை அப்படியே பராமரிப்பது அவசியம்.

பிராய்லர் சிக்கன் உணவு

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம்தான் எனும் நடைமுறை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே மாறிவிட்டது தமிழகத்தில். அதுவும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்தான் பெரும்பாலானவர்களின் தேர்வு. சிக்கன் என்றாலே பிராய்லர் சிக்கன்தான் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், மிக மோசமான நவீன உணவுகள் பட்டியலில் சிக்கனுக்குத்தான் முக்கியமான இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

பிராய்லர் சிக்கன் என்றவுடனேயே தஞ்சையில் இருக்கும் `மொஹல் பிரியாணி’யை நினைவு கூராமல் இருக்க முடியாது. பிராய்லர் சிக்கன் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தஞ்சைவாசிகள் மொஹல் பிரியாணியில் போய் சிக்கன் பிரியாணி கேட்டால் போதும். பிராய்லர் சிக்கன் பாதிப்பு பற்றி கடை உரிமையாளரும், இயற்கை வாழ்வியல் ஆய்வாளருமான முனாஃப் தரும் விளக்கத்தில் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார். எல்லா கடைகளையும்போல சிக்கன், மட்டன் என உணவு தயாரித்துக்கொண்டிருந்த முனாஃப், பிராய்லர் சிக்கனின் தீங்குகளைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தன் உணவகத்தில் சிக்கன் உணவுகளை நிறுத்திவிட்டார். “வியாபாரம் குறைந்தாலும் பரவாயில்லை. கொடுக்கும் உணவு தீமைசெய்வது தெரிந்த பிறகு எப்படி விற்பது?” - இது  அவரது வாதம். பன்னாட்டு நிறுவனங்களும் இப்படி மனசாட்சியோடு யோசித்தால், உணவு பற்றிய பயம் இன்றி நாமும் சாப்பிடும் வேலையை மட்டும் செய்யலாம். இப்படி உணவுக் கலப்படம் பற்றி வாசிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும்.
நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதாகவும், இன்னும் பல்வேறு மருத்துவக்குணங்கள் இருப்பதாகவும் சிக்கன் கம்பெனிகளும், மருத்துவர்களும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். 90-களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது நவீன அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாகத்தான் கருதப்பட்டது.  புத்தாயிரத்தில் நவீன உணவுகளின் மீதான சந்தேகங்கள் வலுப்படத் தொடங்கின. முதலில் குழந்தை உணவுகளின் மீது தொடங்கிய சந்தேகப் பார்வை படிப்படியாக எல்லா வகையான ‘தயாரிக்கப்பட்ட’ உணவுகளின் மீதும் படிந்தது. இன்று, பிராய்லர் சிக்கன் மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான புது உணவுகளின் மீதான ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அசைவ உணவுப் பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவாக இருப்பது பிராய்லர் சிக்கன்தான்.

`பிராய்லர் சிக்கனின் பாதிப்பால் புற்றுநோய் வரக்கூடும்’ என பிப்ரவரி முதல் வார நாளிதழ்கள் அலறியதைப் பார்த்திருப்பீர்கள். இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ‘ட்யூக்சென் பல்கலைக்கழகம்’ (Duquesne University) ஏற்கெனவே இதே வகையான முடிவுகளை அறிவித்துள்ளது பிராய்லர் சிக்கனும்... புற்றுநோயும்!

நம் ஊரில் பிராய்லர் கோழி வளர்ப்பைப் பார்த்தாலே அதில் இருக்கும் சிக்கல் புரிந்துவிடும். பிராய்லர் கோழிகளின் ஆயுள் மிகக் குறுகியது என்பதால், மிக வேகமாக வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அதிக எடையைப் பெறுவதற்காக இரவு நேரங்களிலும் மின்சார வெளிச்சத்தை உருவாக்கி, சாப்பிடவைத்துக்கொண்டே இருப்பார்கள்.

சரியாகத் தூங்காதவர்களை கிராமத்தில் ‘கோழித்தூக்கம் தூங்குபவன்’ என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். சாதாரணமாகவே, கோழிகள் மிகக் குறைவான உறக்கத்தையே மேற்கொள்ளும். அதிலும், பிராய்லர் கோழிகளைத் தூங்காமல் சாப்பிடச் செய்வதே முழு லாபம் தரும் உத்தி. இப்படி முறையற்ற உணவால், எடை அதிகமாக வளர்ந்த கோழியைக்கூட கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதையும் மீறி இன்னும் கூடுதல் வளர்ச்சி பெறுவதற்காக, பல வகையான ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள். 

சர்க்கரை நோய்க்குக் காரணம் `இன்சுலின்’ எனும் ஹார்மோன் குறைபாடு. இன்சுலின் ஏன் குறைகிறது என்பது இன்னும் ஆய்வுக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. அதேபோல, அட்ரினலின் ஹார்மோன் சமநிலை மாறுபாடே ரத்த அழுத்தம். இப்படி, ஒவ்வொரு ஹார்மோனும் சரியான அளவில் இல்லாமல், கூடுவதாலோ அல்லது குறைவதாலோ புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட ஹார்மோன்களில் சிலவற்றைத்தான் பிராய்லர் கோழிகளின் மிகை வளர்ச்சிக்குப் பயன்படுத்துகி றார்கள். பிராய்லர் கோழி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஹார்மோன் தான் ஈஸ்ட்ரோஜன். இது, மிக வேகமான உடல் வளர்ச்சிக்குப் பயன்படுவதால் ஈஸ்ட்ரோஜன் கொடுக்கப்படும் கோழிகள் மிக வேகமாக வளர்கின்றன. அதிக எடை பெறுகின்றன.
ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கும், புரோஜெஸ்டிரான் ஆண்களுக்கும் இரண் டாம் பருவப் பால் வேறுபாட்டில் முக்கியமான ஹார் மோன்கள் ஆகும். இவை சரியான அளவில் சுரந்தால் தான், ஆண்களுக்கு மீசை முளைப்பதில் தொடங்கி, முழு ஆணாக மாறுவதற்குரிய எல்லா மாற்றங்களும் நடக்கும். அதேபோல, பெண்களின் இரண்டாம் நிலை மாற்றங்கள் அனைத்தையும் ஈஸ்ட்ரோஜன் நிர்ணயிக்கிறது. கர்ப்பப்பை வளர்ச்சி, மார்பக வளர்ச்சி எனப் பலவிதமான பணிகளை ஈஸ்ட்ரோஜன் செய்கிறது. கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜனால் பலவிதமான ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. டெல்லியில் இயங்கும் ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’  தன்னுடைய அங்கமான ‘மாசுக் கண்காணிப்பு ஆய்வகம்’ மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறியும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாிசோதனை முடிவில், கோழியின் வளர்ச்சிக்காகச் செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள் கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இப்படி, கோழிகளின் கறியில் ஆன்டிபயாட்டிக்குகளைப் போல, ஹார்மோன்களும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் புற்றுநோய் வரை ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிராய்லர் கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்குக் கூடுதலானால் ‘கைனக்கோமாஸ்டியா’ (Gynaecomastia) எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே பூப்பெய்துவது உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

பிராய்லர் கோழியின் அற்ப ஆயுள்போல அது ஏற்படுத்தும் பாதிப்பும் நம் ஆயுளையும் குறைத்துவிடுகிறது. பிராய்லரைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கான வழி.
பிராய்லர் கோழியில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பதால் கோழி சாப்பிடுவதை விட்டுவிட வேண்டியது இல்லை. ஏனென்றால், தமிழர் உணவில் கோழி ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத உணவு. கிராமங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், சளி மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் கோழிச்சாறும் கோழிக்குழம்பும் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சுறுசுறுப்பு இல்லாத வாலிபர்களுக்கு, உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்களுக்கு, புதிதாக திருமணமான மணமக்களுக்கு, நீடித்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, வயது முதிர்ந்து உடல் சோர்ந்த பெரியவர் களுக்கு என நம் வாழ்வின் எல்லா நிகழ்ச்சி களிலும் கோழி ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தது. பிராய்லர் கோழிக்குப் பதிலாக, நாட்டுக்கோழியை உணவாகப் பயன்படுத்துவது சிறப்பு.

செரிமானம் அறிவோம்!

ட்டு கட்டங்களாக நடைபெறும் செரிமானத்தின் முதல் நிலை, உணவை நன்கு மெல்லுவதுதான். உணவு நம் வாயைத் தாண்டி விட்டால்,  மற்ற உறுப்புகள் எல்லாம் அனிச்சையாகச் செயல்படும். நன்கு மென்று சாப்பிடுவது மட்டும்தான் நம் கடமை. ‘உணவை ஏன் மெல்ல வேண்டும்... செரிமான மண்டலம்தான் வலிமையானதாயிற்றே... எந்த ஓர் உணவையும் அரைத்துச் சக்கையை வெளியே தள்ளுமே?’ என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். உணவு என்பது பல சங்கிலிகளால் ஆனது. ஒன்றுக்கொன்று மிகவும் இறுக்கமான பிணைப்பில் இருக்கும். மாவுச்சத்து கொஞ்சம் சாதாரணப் பிணைப்பில் இருக்கும்; புரதச்சத்து மிகவும் நெருக்கமான பிணைப்பிலும், கொழுப்புச்சத்து மற்ற இரண்டைவிட மிக நெருக்கமான பிணைப்பிலும் இருக்கும். எனவேதான், மாவுச்சத்து எளிதில் செரிமானம் அடைகிறது.
நன்றாக மெல்லும்போதுதான் உணவின் முழுச்சுவை தெரியும். உமிழ்நீர் நன்றாகச் சுரக்கும். நாம் பற்களால் கடித்து, அரைத்த உணவை உமிழ்நீர்தான் எளிதாக உணவுக்குழாய் வழியாகத் தள்ளுவதற்கு உறுதுணையாக இருக்கும். உமிழ்நீரோடு கலந்த உணவை இரைப்பை எளிதாக அமிலங்கள் துணையோடு பாகுபோல மாற்றிவிடும். மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 - 1.5 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. நன்றாக மெல்லாமல் விழுங்கும்போது உணவும் அரைபடாது, உமிழ்நீரும் கிடைக்காது என்பதால் உணவுக்குழாய் அடைத்துக்கொள்ளும். இரைப்பை கடினமாக வேலைசெய்து, பெப்ஸின் மற்றும் சில அமிலங்களைப் பயன்படுத்தி உணவைச் சிதைத்துக் கூழாக்கும்.

ஏதோ ஓரிருநாள் என்றால் பிரச்னை இல்லை. ஆனால், ஒருவர் எப்போதுமே வேகமாக மெல்லாமல் உணவை விழுங்குகிறார் எனில், செரிமான மண்டலம் எப்போதுமே ஓவர்டைம் வேலைபார்க்கும் நிலை ஏற்படும். இதனால்,  செரிமான  உறுப்புகள் விரைவில் பாதிப்படையும். செரிமான மண்டலத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. எனவே, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
எத்தனை முறை மெல்லுவது ?

உணவை இப்படித்தான் மெல்ல வேண்டும், இத்தனை முறை மெல்ல வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. உணவு உட்கொள்வதை இயல்பாக, நிதானமாக, அமைதியாக அனுபவித்து, ரசித்துச் செய்தாலே போதும். 

‘நொறுக்குத் தீனிகள்’ ஏன் பிரபலம்?
ஆவலாகக் கடிப்பது அன்பின் வெளிப்பாடுகூட. மனிதனின் ஆசையும் ஆவேசமும் பல்லால் நொறுக்குதல், அரைத்தல் போன்றவற்றால் கட்டுப்படுகிறது. சிப்ஸ், முறுக்கை நொறுக்கும்போது அவை எழுப்பும் சில ஒலிகள் மூளைக்கு அமைதி தருகின்றன.
ஆழ்மனக் கோபத்தையும் ஆதங்கத்தையும் மாற்றிட, சிலர் அதீதமாக மெல்லுவார்கள். நொறுக்குத்தீனிகளை நாம் எப்போதும் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. நட்ஸ், சிறுதானிய ஸ்நாக்ஸ் என ஆரோக்கியம் தருவதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அவசரமாய் அள்ளி விழுங்கினால் என்ன ஆகும்?


‘பல் ஆறினால்தான்  பசியாறும்’ என்பார்கள். மாலை வேளையில் பட்டாணி போன்றவற்றை மென்றுகொண்டே இருந்தால், எளிதில் பசி ஆறுவதை நாம் உணர முடியும். அவசரமாகச் சாப்பிட்டால்,  பசியாறுவதை மூளை உணராமல் இன்னும் சாப்பிடத் தூண்டும். இதனால், அதிகமாகச் சாப்பிடுவதால் செரிமானம் ஆக நேரம் ஆகும். அவசரமாகச் சாப்பிடுவது மூளையையும் பதற்றத்துக்கு தள்ளி, உடல் மற்றும் மனதளவில்  உபாதைகளை ஏற்படுத்தும்.

சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா ? 


உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுபவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது. சாப்பிடும்போது அதிகம்  பேசக் கூடாது. தண்ணீரை அண்ணாந்து, தூக்கிக் குடிக்கக் கூடாது. ஏனெனில், காற்றை நாம் விழுங்கினால் வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவை ஏற்படும். உணவை வாய்க்குள்வைத்து, வாயைத் திறக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த வழிமுறை.

சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? 


ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை  சாப்பிடுவதுதான் சிறப்பான வழிமுறை. 

குடும்பத்தோடு, நண்பர்களோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. நீங்களாக விரும்பி யாரோடு சேர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறீர்களோ, அவர் மேல்தான் அதிகப் பிரியம்வைத்திருக்கிறீர்கள் என்பது உளவியல் உண்மை. தினமும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கிவிடுங்கள். தினமும் 10 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக உடலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் பழக்கத்தைத் தவிருங்கள்.

புத்துணர்வு தரும் உணவுகள்

பிஸி வாழ்க்கையில், வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவை நம்மை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரித்தால், புத்துணர்வு தானாகவே கிடைக்கும். சரியான உணவு வகைகளை, சரியான நேரத்துக்கு தவிர்க்காமல் எடுத்துக்கொள்வதும், போதுமான நீர் ஆகாரங்களைப் பருகுவதும் சோர்வைத் தவிர்த்து சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் வலம் வர நமக்கு உதவும்.
நீர் உணவு

புத்துணர்வுடன் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். (சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரையின்படி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்) உடலில் நீர் அளவு குறையும்போது, உடற்சோர்வு ஏற்படும்.
தேன் நீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு அவுன்ஸ் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர கபத்தன்மை சீராகி, உடல் சோர்வின்றி இருக்கும்; ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லது.

முருங்கைக்கீரை சூப்
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.

அருகம்புல் சாறு
அருகம்புல் ஓர் அற்புத மூலிகை. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. உடல் வறட்சியை நீக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. விஷக்கடி, தோல் ஒவ்வாமைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து. அருகம்புல்லில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளன. களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடிக்காத இடங்களில் சேகரித்த அருகம்புல்லை சுத்தம்செய்து ஒரு டம்ளர் நீரைச் சேர்த்துப் பிழிந்து எடுத்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க நல்லது.

ராகி கூழ்
முளைகட்டிய ராகி ஒரு பங்கு, தோல் நீக்கிய முழு உளுந்து அரைப் பங்கு, சுக்கு, ஏலக்காய் சிறிதளவு அனைத்தையும் வறுத்து, பின் மாவுபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு எடுத்து, கஞ்சி காய்ச்சி பால், சர்க்கரை கலந்து பருக உடல் பலம் பெறும். ராகியில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. குழந்தைகள். சர்க்கரை நோயாளிகள் (சர்க்கரையைத் தவிர்த்துப் பயன்படுத்தலாம்), இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் போன்ற அனைவருக்கும் சிறந்தது.

சோயா பால்
ஒரு கைப்பிடி அளவு சோயா எடுத்து, நீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, பால் எடுத்துக் காய்ச்சி, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம். இதில், அதிக அளவு புரதச்சத்துடன் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற காலத்தில் இது ஒரு சிறந்த உணவு.

பார்லி நீர்
பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

சுக்கு காபி
சுக்கு, மல்லி, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி கலந்து, காபிபோல் செய்து, பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்துவர, பசி மந்தம், தலைவலி, மூட்டுவலி நீங்கும். மேலும், சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும்.

நெல்லிக்காய்ச் சாறு
2 அல்லது 3 பெரிய நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்க, பார்வைத்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நீக்கி, மஞ்சள் தூள் கலந்து பருகிவர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகள்...

புரதம் நிறைந்த உணவுகள் நமது உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் முக்கியமானவை. புரதச்சத்தை நாம் பயறு வகைகள், மாமிச உணவுகள், முட்டை, பால், மீன், பருப்பு வகைகளில் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். 

நச்சு அகற்றும் மூலிகை உணவுகள்...

அருகம்புல், கீழாநெல்லி, கரிசாலை போன்ற மூலிகைகளை உணவில் சேர்க்கும்போது, நம் உடலில் சேரும் தேவை இல்லாத நச்சுக்களை நீக்கி, புத்துணர்வுடன் வைக்கும்.

Thursday, February 25, 2016

'வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்... வீணாகிவிடும் உடம்பு!

பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ... காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே...’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ‘‘அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!’’ .
ஊட்டச்சத்து அதிகமானால்... ஊளைச்சதை!
‘‘ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும். 
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான். கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.
ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
ஃப்ரிட்ஜில் உணவுகள்...
கொண்டுவரும் பிரச்னைகள்!
ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடும். மேலும், ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஒபிசிட்டி, இதயநோய் என்று விளைவுகள் தீவிரமாக இருக்கும்.
காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பை வரவழைக்கும்.
அசைவ உணவு வகைகளைச் சூடுசெய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.
பழங்களும் அளவாகவே..!
மைக்ரோ ஊட்டச்சத்து வகையில் விட்டமின் `ஏ’, `சி’, `இ’, `டி’, இரும்புச் சத்து போன்றவை அடங்கும். இந்தச் சத்துகள் எல்லாம் பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. குழந்தை சாப்பிடவில்லை, மீதமாகிவிட்டது என ஏதோ ஒரு காரணத்தால் தேவையான அளவுக்கும் ‘எக்ஸ்ட்ரா’வாக  இவற்றைச் சாப்பிடுவது அன்றாடம்தான்.
இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வாந்தி, மயங்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தலைவலி, ஓய்வின்மை, பதற்றம் போன்ற உடனடிக் கோளாறுகளை உடலில் உண்டு பண்ணும். மைக்ரோ சத்துக்களை சமமாகச் சாப்பிடும் போதுதான், உடலில் மெட்டபாலிஸம் சரியாக இருக்கும். தொடர்ந்து ஒரே வகை பழம், காய் என்று அதிகளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டுபண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்,
 உதாரணமாக, கால்சியம் சத்தை உடல் கிரகிக்க விட்டமின் `டி’ தேவை. ஆனால், கால்சியம் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியமானது...  விட்டமின் `டி’ தேவையை உடலில் ஈடுசெய்ய விடாது, அந்த நேரம் கால்சியமும் உடலில் தங்காது. இது புதிதாக ஒரு பிரச்னையை உண்டுபண்ணி, கால்சியம் குறைபாடாக மாற்றிவிடும்.
நீர்ச்சத்து உணவுகளை அதிகளவு சாப்பிடும் போது அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். எனினும், சிறுநீரகத்துக்கு அது அதிகப்படியான வேலையாக இருக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்.
மனதளவிலும் பிரச்னைகள்..!
உடற்செயல்பாட்டுப் பிரச்னைகள் தவிரவும், மனதளவில் இது ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. உணவு வீணாவது பற்றிய கவலை முதலில் மனதை சோர்வுற வைக்கும். வீணாக்காமல் அதைச் சாப்பிட்ட பிறகு, தேவைக்கும் அதிகமாக உள்ளே தள்ளியதைப் பற்றிய எண்ணமும் உறுத்திக்கொண்டே இருக்கும். இதெல்லாம் மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல, குடும்பம், குழந்தை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அடங்கிய பிறகு வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.
இதற்கெல்லாம் சிம்பிள் தீர்வு... வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது. அப்படியே எதிர்பாராத காரணங்களால் உணவு மிகுந்து போனாலும், வீட்டில் வேலை பார்க்கும் பெண், தெருமுனையில் அமர்ந்திருக்கும் ஆதரவற்ற முதியவர் என்று தேவை இருப்பவர்களுக்கு அதைக் கொடுங்கள். அல்லது அதை எந்த மனச் சலனமும் இல்லாமல் குப்பையில் கொட்டுங்கள். ஏனெனில், வீணாகும் உணவைவிட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம். கிச்சனில் வேஸ்ட்டாவதைப் பற்றிக் கவலைப்பட்டு, மருத்துவச் செலவுகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்!’’.

கொழுப்பை கரைக்கும் வெங்காயம்!

மிழக உணவுகளில் வெங் காயத்துக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் வெங்காய சட்னி, வெங்காய சாம்பார், வெங்காய பச்சடி, வெங்காய வடகம் என வெங்காய உணவுகளின் பட்டி யல் நீள்கிறது. வெங்காயத்தில் வைட்டமின் `சி’ சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் `சி’ சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்பதன் மூலம் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
வெங்காயம் ஒரு நச்சுக் கிருமி கொல்லியாக பயன்படுகிறது. உதாரணமாக, அம்மை மற்றும் காலரா பரவும் காலங்களில் வீடுகளைச் சுற்றிலும் சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்தால் அந்த நச்சுக்கிருமிகளை உள்ளிழுத்து, நோய்களிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை படைத்தது.  மேலும் உடலை மெலிதாக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தை தணிக்கவும், மூளை சுறுசுறுப்படையவும் செய்கிறது வெங்காயம். இதுதவிர கொழுப்புச்சத்தை கரைத்து வயிற்றுக்கட்டிகளை நீக்கக்கூடியது.
வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் மோர் விட்டு உப்பு, மிளகு, சீரகம் போட்டு தாளித்து பகல் உணவோடு சாப்பிட்டு வந்தால் அதன் சுவை மட்டுமல்ல... சுகமே தனி. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் கபம் மற்றும் இதயக்கோளாறுகள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் அன்றாடம் வெங்காய பச்சடியை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்!

முடக்கறுத்தான்.... இதை முடக்கத்தான், மொடக்கத்தான் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். முடக்கு + அறுத்தான். அதாவது, வாதநோயால் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு, வாதக்கோளாறுகளை சரிசெய்வதால் இந்த மூலிகைக்கு அந்தப் பெயர் வந்தது. வேலியோரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கீரை வகையைச் சேர்ந்தது. இதை சாம்பார், காரக்குழம்பு அல்லது புளிக்குழம்புகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும். இதைப் பயன்படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம், ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை.
வாதப்பிடிப்பு, இரைப்பு இருமல், மூலம், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையை நீர் விட்டு காய்ச்சி, தினமும் 2 தடவை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் கிடைக்கும். இதேபோல் முடக்கத்தான் ரசம் வைத்தும் சாப்பிடலாம். தோசை மாவுடன் மிக்ஸியில் அரைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்களுக்கும், மூட்டுவலியால் அவதிப்படும் முதியோருக்கும் இந்த முடக்கத்தான் கீரை உணவுகள் கைகண்ட பலன் தரும்

மிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..?

‘டெங்கு’ காய்ச்சல் பீதி, நாடெங்கிலும் பரவிவருகிறது. இதன் தாக்கம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அதைப் பற்றிய புரிதல் அவசியம். படியுங்கள்... தெளியுங்கள்!
 வைரஸ் காய்ச்சலான டெங்கு, `ஏயிடிஸ் எஜிப்டி' (Aedes aegypti) என்கிற கொசுக்களினால் பரவக் கூடியது. ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. இந்தக் கொசுக்கள், பகல் நேரங்களில் கடிக்கக் கூடியவை. கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும் இந்தக் கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டைகளை இடக்கூடியவை.
 நோயின் ஆரம்ப கட்டத்தில் அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்பகுதியில் வலி ஏற்படுதல், எலும்பை முறிக்கும் அளவுக்கு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், காய்ச்சல் குறைந்த பிறகும் தோல் தடித்து சிவப்படைதல் போன்றவை ஏற்படும். முறையான சிகிச்சை இன்றி அடுத்தகட்டம் போகிறபோது, கல்லீரல் அழற்சி, சுவாசக் கோளாறு, மூளையில் ரத்தக் கசிவு, மூளை நரம்பு செயலிழத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.
 பொதுவாக ஒரு மனிதனின் மைக்ரோ லிட்டர் ரத்த அளவில், 1,50,000 - 4,50,000 வரை தட்டணுக்கள் (Platelete Transfusion) இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைந்துவிடுகிறது. விளைவாக பல் ஈறுகள், மூக்கு, வயிறு, குடல் இவற்றில் ரத்தக் கசிவு உண்டாகிறது. இன்னும் 10,000 மைக்ரோலிட்டராக  குறைகிறபோது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தட்டணுக்களை உட்செலுத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது.
 நல்ல ஓய்வு, உடலின் நீர் இழப்பை சரிசெய்யும் உணவு, காய்ச்சலுக்கு தகுந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்... இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
 பப்பாளி இலைச் சாறு, டெங்கு காய்ச்சலின் வீரியத்தைக் குறைக்கும். நம் பாரம்பர்ய நாட்டுவைத்திய முறையில், நிலவேம்பு, மலைவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு எல்லாம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்று கூறியுள்ளார்கள்.
‘மைக்ரோ’ மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்து, ‘கேரிகா பப்பாயா’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட பப்பாளியின் இலைச் சாற்றில் இருந்து ‘கேரிபில்’ எனும் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளது.
நமக்கிருக்கிறது நம் பாட்டன் சொன்ன வைத்தியம்... பப்பாளி இலைச் சாறு!.

Saturday, February 20, 2016

மார்பகப் புற்றும்... சிகிச்சை முறைகளும்!

‘‘மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவ

சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி: செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என... 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி: கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும்.  இந்த சிகிச்சையானது  5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி: மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத் திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.  கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி: ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு... 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை... சாத்தியமா?

மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன. கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!

இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு...

அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணங்கள்...

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.
உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்! 

எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD' புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.

துணை சிகிச்சைகள்!

மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.   

தியானம் 

பிரானிக் ஹீலிங்  

ரெய்கி 

யோகா 

யோகா நித்ரா

சுவாசப் பயிற்சி

பிரணாயாமம்

மந்திரம் ஜெபித்தல்

ரெஃப்ளெக்ஸாலஜி

அரோமா தெரபி 

ஆயுர்வேத மசாஜ்

அக்குபஞ்சர்

இசை சிகிச்சை

கலை சிகிச்சை

ஜர்னலிங் 

உணர்ச்சிபூர்வ சிகிச்சை



சிகிச்சையும் தாம்பத்ய உறவும்!

மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம். அதற்கான காரணங்களாக... உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம்,  மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்... இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!