Monday, June 29, 2015

கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்



கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம் மற்றும் கண்களை பாதுகாக்கின்றன. கேன்சர் அபாயத்தை குறைக்கின்றன. 

இவற்றில் உள்ள பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. ஆரஞ்சு வண்ண பழங்களில் ஆல்பா கரோட்டின் அதிகம் உள்ளது. இதுவும் மற்றொரு வகையான வைட்டமின் ஏ ஆகும். இவை கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றன. கரோட்டினாய்டு இதய நோய்களை தடுக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் ஆரஞ்சு வண்ண காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது. 

இவை கண்களையும் பாதுகாக்கின்றன. கண் நோய்கள், பார்வை குறைபாடுகளை நீக்கும் வலிமை இந்த பழங்களுக்கு உண்டு. பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 4 முதல் 6 கப் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் 3 கப் சேர்த்துக் கொள்ளலாம்.

எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள்

எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். 

இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன. சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. 

கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் வைட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், தயிர், பன்னீர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும். 

பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம். புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். 

ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. 

அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம். 

கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

அல்சர் வரக்காரணம் - தீர்க்கும் வழிமுறைகள்

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.

காரணங்கள் :

காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.

உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண் வர காணமாகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை :

இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.

1. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

2. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.

3. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.

4. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.

5. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.

6. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.

7. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

8. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.

9. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

தலைச்சுற்றை நீங்கும் கறிவேப்பிலை தைலம்

இந்த தைலத்தை தலைவலி வரும் சமயங்களில் தேய்த்து வந்தால் தலை பாரம், தலைச்சுற்றி போன்ற பிரச்சனைகள் தீரும். இந்த தைலம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 100 கிராம் 
பச்சை கொத்தமல்லி - 25 கிராம் 
சீரகம் - 25 கிராம் 
நல்லெண்ணை - 300 கிராம் 
பசுவின் பால் - 100 மில்லி 

செய்முறை :

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். 

ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். 

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று மட்டும் குளிர்ந்த உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். இது உடல் சூட்டை குறைக்கும்.

எந்தெந்த காய்கறிகளை எப்படி கழுவவேண்டும் தெரியுமா?

நாம் நமது வீட்டு சமையலில் 25 விதமான காய்கறிகளை பயன்படுத்திவருகிறோம். அவை பெரும்பாலும் விஷத்தன்மையோடுதான் விற்பனைக்கு வருகின்றன. நாமும் விஷ கலப்போடுதான் அவைகளை வாங்கி வருகிறோம். காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும்– அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

பலமுறை பயன்படுத்தப்படும் அந்த விஷ மருந்துகளோடுதான் காய்கள் விளைகின்றன. அவைகளைத்தான் நாம் வாங்கி வருகிறோம். அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் நன்றாக கழுவ வேண்டும்.

* புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு வினிகர் கலந்த கலவையில் அதை சுத்தம் செய்யவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடங்கள் வைத்திருங்கள்.

பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள். புதினா, கறிவேப்பிலையை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் மேற்கண்ட முறையில் சுத்தம் செய்து தண்ணீர் வடிய வசதியுள்ள பாத்திரத்தில் இரவு முழுவதும் வைத்திருங்கள். பின்பு காட்டன் துணியில் பொதிந்து, பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைத்து பிரிட்ஜில் வைத்து தேவைக்கு பயன்படுத்துங்கள்.

* முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு பலமுறை நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்தெடுத்துவிட்டு பயன்படுத்துங்கள்.

* நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு மேற்கண்ட ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.

* மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு பலமுறை தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள். உப்பு கரைசலிலும் இதனை முக்கிவைத்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் கல் உப்பை கரைத்து, உப்பு கரைசல் திரவத்தை உருவாக்கவேண்டும்.

* முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பலமுறை தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை லேசாக சுரண்டி எடுத்துவிட்டு நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.

* வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாவக்காய், சுரைக்காய் போன்றவைகளை துணிதுவைக்க பயன்படுத்தும் மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்துவிட்டு பின்பு கழுவி, துடைத்து பயன்படுத்துங்கள்.

* காலிபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுங்கள். அவைகளை வினிகர் அல்லது உப்பு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தவேண்டும்.

* பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு பலமுறை நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.

* மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.

மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம்


கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அதுதான் பார்வைக் குறைபாடு என்கிறோம். 

18 வயது வரை நாம் வளர்கிற காலம் என்பதால் கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு. 18 வயதுக்குட்பட்டவர்கள் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பவர் பெரும்பாலும் மாறாது. 

இரண்டு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும். இடையில் பார்வை மங்கலாவதுபோல் தெரிந்தாலோ வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ கண்களிலிருந்து தண்ணீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும். கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றிவிடுவது நல்லது. 

40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்சனை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்சனைகளும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.

மீன் எண்ணெய்யின் மகத்துவம்



உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி அதிகம் தெரியாது. 

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டாமல். இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப்பட்டியல்



நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை சக்தியாகவும், தேவைக்கு அதிகமான சர்க்கரையை கொழுப்பாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப்பணியை செய்கிறது. 

பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறையும் போது அல்லது வேலை செய்ய முடியாத போது உணவில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது 180 mg/dL தாண்டும் போது சிறுநீரில் சர்க்கரை வெளியாகிறது, இது தான் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு முறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். 

காலை: 

மருதம் பட்டை மூலிகைக் கஷாயம் – ஒரு கப் (100 மி.லி) அல்லது டீ, காபி சர்க்கரை இல்லாமல் அருந்த வேண்டும். 

காலை டிபன்: 

இட்லி – 3 அல்லது 
தோசை - 2, 
சப்பாத்தி- 1, 
இடியாப்பம்- 1, 
சம்பா ரவை உப்புமா, 
மிளகு பொங்கல், 
வெந்தயம் கலந்த கஞ்சியுடன் புதினா, (தேங்காய் சட்னி கண்டிப்பாக சாப்பிடக்கூடாது). இதனை தவிர ஏதேனும் கீரை சூப் குடிக்கலாம். 

காலை 11 மணி: 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகளில் ஏதாவது ஒன்று கட்டாயம் சாப்பிடவும். பாகற்காயை சாறாக குடிக்கலாம். 

மதிய உணவு: 

ஒரு கப் சாதம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாகற்காய், பீன்ஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் சேர்த்த சாம்பார் சாப்பிடலாம். மேலும், பழவகைகளில் பேரிக்காய், கொய்யாப்பழம் சாப்பிடலாம். 

இரவு உணவு: 

கோதுமை சார்ந்த உணவுகள், 2 அல்லது 3 காய்கறி பச்சடி மற்றும் சட்னி வகைகள்.

Saturday, June 27, 2015

வெங்காயம் இருக்க பயமேன்!


ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன

வேப்பம்பூ சூப்


எங்கள் வீட்டில் ரொம்பவே விசேஷமானது வேப்பம் பூ ரசம். ஆனாலும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் அதை அறவே தவிர்த்து விடுவார்கள். அதனால், அவர்களை ஈர்ப்பதற்காக வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்து வேப்பம்பூவில் சூப் செய்து பார்க்கலாம் என்று முயன்று பார்த்தேன். நானே ஆச்சரியப்படும் வகையில் குழந்தைகள் இதை விரும்பிப் பருகினார்கள். மாதம் இருமுறை கட்டாயம் எங்கள் வீட்டில் வேப்பம்பூ சூப் மணக்கிறது. இதைச் செய்வதும் சுலபம்; உடலுக்கும் நலம்.

சூப் செய்யத் தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப், எலுமிச்சைச் சாறு & 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும். இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம். கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது.

ஒற்றைத் தலைவலி! (மைக்ரேன்)


பரம்பரைக் குறைபாட்டால் வரும் ஒற்றைத் தலைவலி இது. பெண்களை அதிகம் தாக்கும் என்பதால் இதை ‘பெண்களுக்கான தலைவலி’ என்று சொல்லலாம். மன அழுத்தம், சேராத உணவுப் பொருட்கள், அதிக வெளிச்சம், தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம், சாப்பிடாமல் இருப்பது, தலையில் காயம்படுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். அதுவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி குறைந்துவிடும். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிடும். ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன், கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு... போன்ற அறிகுறிகள் தென்படும்.

இருமலைக் குணமாக்க தேன் நல்லதொரு மருந்து


‘இருமலைக் குணமாக்க தேன் நல்லதொரு மருந்து’ என்பது நம்மூர் பாட்டி வைத்தியம்! ஆனால், இந்த உண்மை இப்போதுதான் அமெரிக்கர்களுக்கு உறைத்து இருக்கிறது.

சில நேரங்களில் இடைவிடாத இருமல் தொல்லை பாடாய்ப்படுத்தும். இரவில் தூங்குகிற சமயங்களில் இந்தத் தொடர் இருமல் வந்துவிட்டால்... படும் அவஸ்தையை சொல்லி மாளாது. இதனைத் தடுக்க வழி தெரியாமல் திணறிய அமெரிக்க சுகாதாரத் துறையினர் இப்போது எளிய வழி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். அதுதான் தேன் மருத்துவம்! ‘குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேன் குடிக்கச் செய்தால் போதும். இது அடிக்கடி ஏற்படும் இருமல் தொல்லையைக் குறைப்பதோடு நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவும் வழி செய்கிறது’ என்று அறிவித்திருக்கிறார்கள். இவ்வளவு லேட்டா இருக்காங்களே!

ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்!


திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்.

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?


1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)

இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

Wednesday, June 24, 2015

சளி, இருமலை போக்கும் சுக்கு மல்லி காபி


சளி, இருமல் போன்றவற்றிற்கு சுக்கு மல்லி காபி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும். 

சுக்கு காபி பொடிக்கு :

சுக்கு - 1/2 கப் 
மல்லி - 1/4 கப் 
மிளகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 

சுக்கு காபிக்கு தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 2 கப் 
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன் 
பனங்கற்கண்டு - தேவையான அளவு 

செய்முறை: 

• முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 

• அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!! 

• பனங்கற்கண்டுக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டியும் சேர்த்து கொள்ளலாம்.


கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மல்லி பொடி


இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லிப்பொடியில்  8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. 

மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். 

மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம். 

மல்லி பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.  மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள். 

மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லி பொடி. மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.

Tuesday, June 23, 2015

இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்


இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்....

இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது.

இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

இரவு நேரத்தில்... முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரவு நேரத்தில் மது அருந்துவது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

சிலருக்கு காபி இல்லாத இரவும், பகலும் சாத்தியமற்றது. இந்தகையவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் காபி குடித்தால் தான் சாப்பிட்ட உணர்வே இருக்கும். ஆனால் இரவு தூங்கும் முன்பு காபியை குடிக்க கூடாது. இரவு காபிக் குடிப்பதால், உங்களால் காலையில் விரைவாக எழ முடியாது.

Monday, June 22, 2015

ரத்தத்தில் சர்க்கரை அளவு



சர்க்கரை என்றும் நீரிழிவு என்றும் அதிகமாக பேசி வருகிறோம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதோ அல்லது குறைவதோ நீரிழிவு நோய்தான்.
பொதுவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) - 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து... 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருக்கலாம்.
கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு...
எதுவும் சாப்பிடாமல்....80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து...140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபி, டீ, பால், சிகரெட், மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
சர்க்கரை நோயாளிகளாக இருக்கும் நிலையில் சாப்பிட்ட பின் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்தே ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும்.

எப்படிச் சமைத்தால் உடலுக்கு நல்லது?



உடம்பில் நிறைய சத்து சேர வேண்டுமே என்றெண்ணி நான் நிறைய கீரைகள், வாழைப்பூ, கிழங்குகள், கறிகாய்கள் என்றெல்லாம் ஒரு வாரத்திற்கான பட்டியல் தயாரித்துச் சாப்பிட்டு வருகிறேன். இருந்தாலும் கீரையினுடைய சத்தோ, கறிகாய்களினுடைய சத்தோ உடலில் சிறிதும் சேரவில்லை. இது ஏன்??????

கறிகாய்களை கீரை, பூ, காய், தண்டு, கிழங்கு என பொதுவாக ஐந்து வகையில் பிரிக்கலாம். அவற்றில் கீரை எளிதாகவும், விரைவாகவும், ஜீரணம் ஆகக் கூடியது. அதை விட வரிசையாக பூவும், காயும், கீரைத் தண்டும், கிழங்கும் ஜீரணமாக தாமதமாகக் கூடியவை. உண்ட உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நான்குவிதமாகப் பிரிகிறது. குடலில் நோய் விளைவிக்காமல் ஜீரணத்திற்கு உதவக் கூடியவையும், குடல் மலத்தை புளிக்கவிடாமல் அதிக கெட்ட வாடை ஏற்படாமல் வெளியேற்றக் கூடியவையுமான கிருமிகள் இயற்கையாகவே இருக்கின்றன. இவற்றினுடைய வளர்ச்சிக்கு நீங்கள் சாப்பிடும் உணவில் நான்கில் ஒரு பகுதி பயன்படுகிறது. இரண்டாவதாக ஜீரண சக்தியைத் தருகிற வயிற்று சூட்டிற்கு எரிபொருளாக ஊட்டம் தருவதாக ஆகிறது. மூன்றாவது பங்கு உணவின் சத்தாக மாறி உடல் தாதுக்களுக்கு உணவாகி அவைகளைப் போஷிக்கிறது. மீதியுள்ள பகுதி மலமாக மாறி மற்ற வெளியேற வேண்டிய மலப்பொருட்களைத் தாங்கி வெளியேறுகிறது.
இந்த நான்கு நிலைகளுக்கும் உதவக் கூடியவகையில் உணவுப் பொருளை சமைத்து தயாரிப்பதே பூரண உணவு. காய்கறிகள் இந்த நான்கு நிலைகளுக்கும் முழுவதுமாக உதவக்கூடியவையே. இருப்பினும் கீரையில் இயற்கையாக உள்ள ஜீரணக் கிருமிகளுக்கு உணவாவதிலும் மலத்தை உருண்டையாக்கி எளிதில் வெளியேறச் செய்வதிலும் உள்ள தன்மை அதிகம். மற்ற இருவகையான போஷணைகளுக்கு கீரை அதிகம் பயன்படுவதில்லை. அதனால் தனியாக பெருமளவு கறிகாய்களையோ கீரை வகைகளையோ உணவில் சேர்ப்பதை ஆயுர்வேத நூல்கள் வரவேற்கவில்லை.
கீரையின் சத்து உடலில் சேர அதை நன்கு அலம்பி நறுக்கி நன்றாக வேக வைத்துக் கடைந்து அதிலுள்ள வெந்த நீரை வடிகட்டி எண்ணெய்யை விட்டு வதக்கி மிளகு, உப்பு, பெருங்காயம், சுக்கு, இஞ்சி போன்றவற்றில் சிலவற்றையாவது சேர்த்து தாளித்து பின்னர் உட்கொள்வதே நல்லது. எண்ணெய் சேர்க்க முடியாத நிலையில் பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றை வேக வைத்த நீரையோ அல்லது வெந்த பருப்பைக் கடைந்தோ சேர்த்துக் கொள்ளலாம். கீரையை அதிக அளவில் இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இரவின் குளிர்ச்சி மற்றும் தூக்கத்தால் மந்தமாகிப் போன ஜீரண சக்தியால் கீரை சரியானபடி செரிக்காமல் பூச்சிகளுக்கு குடலில் இடமளிக்கலாம் அல்லது பெருமலப்போக்கு ஏற்பட்டு வயிற்று உப்புசம் வயிறு இரைச்சல் போன்றவற்றிற்கு காரணமாகலாம். சிலர் கீரை வேக வைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டால் சத்து போய்விடுமே என்று அஞ்சுகின்றனர். ஆனால் இந்த நீரை வடிகட்டாமல் அப்படியே சமைத்தால் கீரை கனத்த உணவாக மாறிவிடும். அதனால் அதிலுள்ள சத்து அனைத்தும் உடலில் சேராமல் பெருமலமாகி வெளியேறிவிடும். ஜீரண சக்தியையும் அது பாதித்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் குடலின் உறிஞ்சக்கூடிய சக்தியைப் பொருத்தே, உடலில் சத்து சேருவதும் வீணாகி வெளியாவதும் ஏற்படுகின்றன. அதனால் நீங்கள் சத்து சத்து என்று ஒன்றையும் வீணடிக்காமல் பச்சையாகவும், தோலுடனும், வேகாமலும், வெந்துள்ள தண்ணீரை அகற்றாமலும் சாப்பிட்டு வயிற்றை குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் கறிகாய்களைப் பற்றிய ஒரு விவரத்தை எடுத்துரைக்கிறது. கீரை, கறிகாய்களை பொடிப் பொடியாக நறுக்குவாய், தண்ணீர் சேர்த்து வேக வைப்பாய், பிழிந்து நீரை அகற்றி எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், மிளகு, சுக்கு, புளிப்பு மாதுளை ஆகியவை சேர்த்து மறுபடி சுண்ட வைப்பாய், இது கேடு விளைவிக்காது. வயிற்றில் மல அடைசலை ஏற்படுத்தாது சுவையூட்டும்.
கிழங்கு, காய் முதலிய காய்கறிகளை நன்றாக வேக வைத்து சமைப்பது நல்லது. அதிலும் கீரையை மிக நன்றாக வேக வைப்பதே செரிமானத்திற்கு உதவும். கறிகாய்கள் அனைத்துமே குளிர்ச்சி தருபவை. மலத்தையும், சிறுநீரையும் அதிக அளவில் வெளியாக்குபவை. குடலை அடைத்துக் கொண்டு தாமதமாகச் செரிக்கக் கூடியவை. அதனால் வாக்படர் எனும் முனிவர் கூறும் ஒரு சிறந்த அறிவுரை என்னவென்றால், இவை அனைத்தையும் வேக வைத்து அதிலுள்ள நீரைப் பிழிந்துவிட்டு எண்ணெய் சேர்த்து பக்குவப்படுத்தியது அதிகம் கேடு விளைவிக்காது என்பதே.

இதயம் காக்கும் காய்கறிகள் !


காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.
ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்துப் பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை விட அதிகமாக நம்மால் பெறமுடிகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பலவிதப் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.
வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங் (Zinc) உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.
சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கும்.


Friday, June 12, 2015

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்


1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.
5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.
6 .வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.
9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.
10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
-குமரேசன் - காது-மூக்கு-தொண்டை நிபுணர்

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!


திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சிலபேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.
அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.
எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.

காபி, டீ குடிக்கலாமா?


நம்மை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய தேநீர், காபிக்கு இன்றும் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா? ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் குடிக்கக் கூடாது? டீ, காபி தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் களைகிறார் சேலத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சரவணன்.
பொதுவாக டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது. புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம். இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிரீன் டீ குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு டீ, காபி குடிக்கலாம்?
உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேநீர் 100 மி.லி. அளவும், காபியை அரை டம்ளர் அளவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் குடிக்கலாம்.