Thursday, August 27, 2015

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு


தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - அரை கிலோ

தேன் - 2 தேக்கரண்டி

தண்ணீர் - 300 மி.லி.

செய்முறை :

• வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.

• அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும். சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.

பழங்கள் தரும் பலன்கள்

பழங்கள் தரும் பலன்கள்

* ஆப்பிள் பார்வை பலத்தைக் கூட்டும் 

* மாதுளை இருதயத்தைக் காக்கும் 

* பப்பாளி ஜீரண சக்தியைக் கொடுக்கும் 

* பலாப்பழம் தேனுடன் இணைத்து சாப்பிட்டால் இருமலைத் தடுக்கும் 

* வாழைப்பழம் உடல் பருமனைக் கூட்டும் 

* மாம்பழம் கண்நோய் போக்கும் 

* ஆரஞ்சு ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும் 

* நார்த்தம்பழம் உடல் உள்ளுறுப்புகளைப் பாதுக் காக்கும். பித்தம் போக்கும். 

* சப்போட்டா பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்களைப் போக்கும். 

* திராட்சைப் பழம் நரம்புத் தளர்ச்சியை நீக்கும். 

* கொய்யாப்பழம் சதைப்பிடிப்பு வலியை அகற்றும் 

* விளாம்பழம் ஞாபக சக்தியை அதிகரிக்க வைக்கும்.

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

காருக்கு எப்படி பெட்ரோல் தேவையோ அது போல் நல்ல எரிசக்தி உங்கள் மூளைக்கும் தேவை. அது இல்லையென்றால் உங்களால் திறமையாக செயல்பட முடியாது. சத்தான பொருட்கள் மூளைக்கு நல்ல சக்தியினை அளித்து உங்களை திறம்பட செயல்பட வைக்கும். நீங்கள் சத்தான உணவினை சாப்பிடும் போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 


உங்களுக்குத் தெரியுமா? வாழைப் பழம் சாப்பிட்டால் உங்கள் மனநிலை மகிழ்ச்சியாகும். அதில் 10மிகி டோபமின் உங்கள் மூளையினை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றது. அடர்ந்த சாக்லேட்டில் இருக்கும் பஸியினால் மூளையில் செரடோனின் எனும் பொருளை சுரக்கச் செய்து உங்களை நல்ல மனநிலையில் வைக்கும். தவறான உணவுகள் சுமார் 65 சதவீதம் மூளையின் செயல்பாட்டினை பாதித்து உங்களை சோர்ந்தவராகவும், சோகமானவராகவும், கோபமானவராகவும் ஆக்கி விடும். 

அதிக ஸ்டிரெஸ், மன உளைச்சலில் இருக்கும் போது அதற்கான ஹார்மேன் வெளியாகிக் கொண்டிருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் ஒமேகா 3 நிறைந்த உணவுகள் இந்த ஹார்மோனை குறைக்கும். அதிக மன உளைச்சல் உடலில் உள்ள புரதத்தினை உடைத்து விடுகின்றது. புரதச் சத்து நிறைந்த உணவினை உண்ணும் போது இந்த ஹார்மோன் தவிர்க்கப்படுகின்றன. 

ஆரோக்கியமான உணவுகளை வாங்க குறைந்த செலவே ஆகும். ஒருவர் அதனை அளவாகவே உண்ண முடியும். பழங்களும், காய்கறிகளும் உண்ணப் பழகும் பொழுது அதன் சுவையினை ருசிக்க முடியும். காரம், உப்பு, மசாலா அவைகள் அகன்று விடும். தவறான உணவுகளை தவிர்ப்பதே ஆரோக்கியத்தினை கூட்டி விடும். 

* நிறைந்த சத்துக்கள் கிடைக்கும் பொழுது கண்டிப்பாய் எப்போதும் சோர்வின்றி ஆரோக்கியமாய் இருப்பர். 

* இத்தகு உணவுகள் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கும். 

* கண்டிப்பாய் மருத்துவ செலவு குறையும்.

இரும்பு சத்து உள்ள உணவுகள்


இரத்த விருத்திக்கு இரும்பு சத்து மிக அவசியமாகின்றது. பொதுவாக அசைவ உணவுகளில் இது மிகவும் நன்கு கிடைக்கின்றது. காய்கறிகளில் புடலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணி, ப்ரோகலி, கீரை போன்ற உணவுகளிலும், உலர்திராட்சை, சோயா பன்னீர், பருப்பு வகைகள் போன்றவைகளிலும் கிடைக்கின்றது.

இரும்பு சத்தில் ஹீம் இரும்பு, நான்ஹீம் இரும்பு என இரு வகைப்படுகின்றது. அசைவ உணவில் இருப்பது ஹீம் இரும்பு 30 சதவீதம் வரை எளிதாய் உடல் எடுத்துக் கொள்கின்றது. நான்ஹீம் இரும்பு தாவரவகை உணவில் உள்ளது. இதில் 2-10 சதவீதம் வரையே உடல் எடுத்துக் கொள்கின்றது.

வைட்டமின் சி தக்காளி, ஆரஞ்சு போன்ற உணவுகள் நான்ஹீம் இரும்பு சத்தினை நன்கு எடுத்துக் கொள்ளப்பட உதவுகின்றது. உலர் திராட்சை, மாதுளை இவற்றில் 30 சதவீதம் இரும்பு சத்து உள்ளது.

பகலில் தூங்குவது நல்லதா


பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய

உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8

மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று

ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு

அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.

இப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு

தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து

அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல்

நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.

அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள்.

இவர்களின் செயல் திறன் பின்னர்

பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை

செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும், ஒரே முடிவுதான் வந்தது.

மேலும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான்

பிரிண்டில், சாராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது.

இவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு

பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம்

இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்தூக்கம் மட்டுமே பயன்தரும். அதைவிட்டு

ஒரு மணி நேர தூக்கமானது, அதிக நேரம் நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்

என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.

Monday, August 17, 2015

கடித்துச் சாப்பிடலாமா? ஜுஸ் குடிக்கலாமா?


ருத்துவமனைகளில் உடல்நிலை சரியில்லாதவர்களைப் பார்க்கப் போனால், அவர் அருகில் ஒருவர் அமர்ந்து சாத்துக்குடியை ஜூஸாக்கித் தருவார். நோயாளியோடு சேர்த்து நமக்கும் ஒரு டம்ளர் ஜூஸ் கிடைக்கும். இப்படி எப்போதாவதுதான் ஜூஸ் குடித்துவந்தோம். மிக்ஸியின் வருகை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கியது. இன்று மூலை முடுக்கெல்லாம் ஜூஸ் கடைகள். ஆனால், கடித்துச் சாப்பிட வேண்டிய பழத்தை ஜூஸாகக் குடிப்பது சரியா?
ஒரு பழம்! நிறைய சத்துக்கள்!
ஒவ்வொரு தாவரத்துக்கும் அதன் பழங்களுக்கும் எனப் பிரத்யேக நிறங்கள், ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் கனிந்து, சூரிய ஒளியைக் கிரகிக்கும்போது, அதில் ‘உயிரியல் செயல்முறை’ (Biological activity) நிகழ்கிறது. இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீரியம் பெறுகின்றன. பழங்களின் தோல்பகுதியில்தான் இந்தச் சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. குறிப்பாக, கார்டினாய்டு, ஃப்ளேவனாய்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பழங்களில் நிறைவாக உள்ளன. இவை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை எதிர்க்கக்கூடியவை. அதனால்தான், பழங்களைக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்கிறோம். பழச்சாறு தயாரிக்கும்போது, முதலில் தூக்கி எறியப்படும் பகுதி, தோல். இதனுடன் ஊட்டச்சத்துக்களும் தூக்கி எறியப்படுகின்றன.
சத்துக்களைச் சிதைக்கிறோம்
100 கிராம் பழத்தில், ஐந்து கிராம் நார்ச்சத்து உள்ளது என்றால், அதை சாறாக்கும்போது, முற்றிலும் அழித்துவிடுகிறோம். பழத்தின் தோல், உள்ளிருக்கும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சிதைக்கும்போது, அதில் உள்ள வைட்டமின்கள் (நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்), தாதுஉப்புக்கள் உடைக்கப்படுகின்றன. இதனுடன் தண்ணீர் சேர்கையில் உடைந்த சத்துக்கள் நீர்த்துப்போகிறது. தவிர, ஒரு நிமிடத்துக்கு மிக்ஸியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பிளேடு சுழற்றப்படுகிறது. இதனால், வெளிப்படும் சிறிய வெப்பம் சில வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அழித்துவிடுகின்றன.
சர்க்கரையை அதிகரிக்கும் பழச்சாறு
ஒரு கிளாஸ் பழச்சாறுக்கு இரண்டு மூன்று பழங்களாவது தேவைப்படும். எங்கும் நிறையப் பழங்களைக்கொண்டு பழச்சாறு தயாரிப்பது இல்லை. பழத்துடன் தண்ணீர் அல்லது பால், ஐஸ்கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால், இருக்கும் சத்துக்களும் நீர்த்துப்போய்விடுகின்றன. கடைசியில், பழத்தில் இருக்கும் சர்க்கரையான ஃப்ரக்டோஸ் (Fructose) மட்டுமே மிஞ்சியிருக்கும். இதனுடன், சுவைக்காக மேலும் சர்க்கரை சேர்க்கப்படும். இவை அனைத்தும், பழச்சாறு அருந்தியதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க நாமே வழிவகுக்கிறோம்.
சர்க்கரை என்ன செய்யும்?
அதிக அளவிலான சர்க்கரையை, கல்லீரல் நேரடியாகக் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கத் தொடங்கும். பழச்சாறோடு, சர்க்கரை சேர்கையில், ஃப்ரக்டோஸ் கல்லீரலில் சேர்ந்து, கொழுப்பாக மாறிவிடும். இன்சுலின் செயல்திறன் குறைவு, கல்லீரல் தொடர்பான நோய்கள்கூட ஏற்படலாம்.
செரிமானம் சமநிலையை இழத்தல்
சத்துக்கள் நீக்கப்பட்ட இனிப்பு நீர்தான் பழச்சாறு. பெரிய பலன்கள் எதுவும் இல்லை. பழச்சாறு அருந்தும்போது, திடீரென்று உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். பழச்சாறு குடித்தால், செரிமானம் உடனடியாகவும் வேகமாகவும் நடைபெறும். செரிமானம் என்பது மெதுவாக நடைபெற வேண்டிய செயல். சமநிலை அல்லாத திடீர் மாற்றங்களோடு நடைபெறும் செரிமானம், நம் உடலுக்கு ஏற்றது அல்ல. தினமும் சர்க்கரை சேர்த்த பழச்சாறு குடிப்போருக்கு, சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை மெதுவாக அதிகரிக்கலாம்.
தீர்வு என்ன?
சில குழந்தைகள் பழங்களைச் சாப்பிட மறுப்பார்கள், சில நோயாளிகளால் பழங்களைக் கடித்துச் சாப்பிட முடியாது. அதுபோன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பழச்சாறு அருந்தலாம். 
முடிந்த அளவுக்குச் சர்க்கரை, பால், நீர் சேர்க்காத, அடர்த்தியான பழச்சாறாக அருந்தலாம்.
குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பழச்சாறுதான் உள்ளன. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றால், பழச்சாறைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே, பழச்சாறு அல்லது சாலட் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், உங்கள் தேர்வு சாலடாக இருக்கட்டும்.
மயக்கமடைந்தவர், உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர், பற்கள் இல்லாதவர், விரதத்தை முடித்தவர் பழச்சாறைப் பருகலாம்.
எலுமிச்சைப் பழத்தைக் கடித்துச் சாப்பிட முடியாது. ஆகவே, எலுமிச்சையைச் சாறாக அருந்தலாம்.
கடையில் விற்கும் ரெடிமேடான பழச்சாறுகளைத் தவிர்க்கலாம்.
சர்க்கரை நோயாளி, உடல் எடை அதிகரித்தவர், கல்லீரல் பாதிக்கப்பட்டவர், சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் பழச்சாறு அருந்துவதைத் தவிர்க்கலாம்.

டெங்கு! தவிர்க்க... தப்பிக்க...


டெங்கு காய்ச்சல், வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இதை, ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசு பரப்புகிறது. சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்றவை, வந்த பிறகு மருத்துவமனைக்குச் செல்வதைக் காட்டிலும் வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இந்தக் கொசுக்களை வளரவிடாமல் தடுப்பது நம் கைகளில்தான் உள்ளது.
டெங்கு அறிகுறிகள்!
தீவிரமான காய்ச்சல், தலைவலி, ரத்தக் கசிவு ஏற்படுதல், மலத்தின் நிறம் கறுப்பாகுதல், வாந்தி, கடுமையான வயிற்று வலி, சருமத்தில் சிவப்புப் புள்ளிகள், சுவாசக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம்.
ரத்தக் கசிவு வராமல் இருக்க!
உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூர லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.
ரத்தத்தில் பிளேட்லெட் அதிகரிக்க!
பப்பாளி இலைச் சாற்றை 5 - 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, பிளேட்லெட் அதிகரிக்கும்.
காய்ச்சல் வந்தால்...
காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளில் காய்ச்சல் சரியாகவில்லை எனில், அவசியம் மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனுடன், டெங்கு காய்ச்சல் வந்தவர்களும் சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனம் கட்டை, பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக் கஷாயமாக அருந்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை, அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க கஷாயம் குடித்த பின், பனங்கற்கண்டைச் சுவைக்கலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க!
எந்தக் கொசு கடித்தாலும் நோய் வராமல் இருக்க, வைரஸோ கிருமிகளோ நம்மைத் தாக்காமல் இருக்க, எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது அவசியம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.
தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
எளிய பாதுகாப்பு வழிகள்
சுருள், மேட், திரவங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் தொண்டை வலி, இருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு, புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே  செய்யலாம்.
வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, பேய்த் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதும் நல்லது.
வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.
மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.
கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்துவதும் சிறந்த வழிதான்.
தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.
எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?
கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். பிளாஸ்டிக் கப்,  தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கவர், டயர், ஆட்டுக்கல், பறவைகளின் உணவு பாத்திரம் போன்ற மழை நீர் தேங்கும் பொருட்களை, அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும்.
செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கற்பூரவல்லி, நொச்சி, வேப்பிலை, லெமன் கிராஸ் போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதால், கொசு அதிகமாக இருக்காது.
குப்பையைச் சேர்த்துவைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது.
கிணறு, தொட்டி ஆகியவற்றை மூடிவைத்திருப்பது அவசியம்.
வீட்டில் கொசு வராமல் இருக்க...
வேப்பிலை, நொச்சி, உப்பு, காய்ந்த மிளகாய், விரலி மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, வீட்டில் புகை போட்டால், காற்றில் கலந்திருக்கும் இந்த வாசத்தால் கொசுக்களால் உள்ளே வர முடியாது. இவை  அனைத்தும் இயற்கையானவை என்பதால், அலர்ஜி, சுவாசப் பிரச்னைகளும் இருக்காது.
தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து, அதில் மண்ணெண்ணெயை எட்டில் ஒரு பங்கு கலந்து, நீர் தேங்கும் இடங்களிலும், வீட்டைச் சுற்றிலும் தெளிக்கலாம். இது கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும்.
வியர்வை வாடை வருவதால்தான், கொசுக்கள் நம்மைக் கடிக்கின்றன. நம் உடலின் வாடையைக் கொசு முகர முடியாமல்போனால், கடிக்க முடியாது. அதற்குத் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு பூங்கற்பூரம் கலந்து இளஞ்சூடாக்கி, ஆறிய பின் சருமத்தில் தடவலாம். வில்லை கற்பூரத்தில் கெமிக்கல்கள் அதிகம், பூங்கற்பூரத்தில் கெமிக்கல்கள் குறைவு.
தேங்காய் எண்ணெயில் பளிங்கு சாம்பிராணி (கண்ணாடித் துண்டு போல இருக்கும்) கலந்து இளஞ்சூடாக்கி, சருமத்தில் தடவலாம்.
வீட்டில் துணி வைத்திருக்கும் இடங்கள், கழிப்பறை, குளிய
லறை ஆகிய இடங்களில் கற்பூரம் மற்றும் ஜாதிக்காயைத் தூள் செய்து, ஓரங்களில் தூவலாம்.

கிரில்டு ஃபுட் சாப்பிடலாமா?


சைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கன்றன. எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா?
கிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன?
இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து , கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இறைச்சிகள் தரமானவையா?
குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள்,  உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம்.
என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
தீயில் சுட்ட சோளம் நல்லது!
சோளத்தை சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெயோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

கையளவு டயட்!


டல் பருமன் உள்ளவர்கள், கைகளின் அளவை நினைவில்வைத்துச் சாப்பிட்டால், எனர்ஜியும் இருக்கும். உடல் எடையும் அதிகரிக்காது.

Friday, August 14, 2015

நெஞ்சு எரிச்சல்


சாப்பிடும்போது, உணவானது உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. உணவு செரிமானம் அடைய இரைப்பையில் அடர் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் உணவுக் குழாய்க்குள் வருவதைத் தடுக்க உணவுக் குழாயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. உணவுக் குழாய் விரிவடையும்போதோ, தடுப்பு வால்வு செயல் இழக்கும்போதோ, அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வரும். இதையே ‘நெஞ்சு எரிச்சல்’ என்கிறோம்.
இப்படி எப்போதாவது நிகழ்ந்தால,் பிரச்னை இல்லை. வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது அன்றாட வாழ்வையே பாதிக்கும் அளவுக்கோ அமிலம் எதுக்களித்தால், அது ஒரு நோய். உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
அறிகுறிகள்
  நெஞ்சு எரிச்சல்
  சில சமயம் தொண்டை வரை எரிச்சல், கூடவே வாயில் புளிப்பான சுவை
  நெஞ்சு வலி
  விழுங்குவதில் சிரமம்
  வறட்டு இருமல்
  தொண்டைக் கரகரப்பு அல்லது தொண்டையில் புண்
  உணவு அல்லது புளிப்புத் திரவம் எதுக்களிப்பு
  தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு
காரணம்
உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதனைச் சுற்றி உள்ள தசைகள் விரிந்து உணவானது இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கிறது. உணவு உள்ளே சென்றதும் இது தானாக மூடிக்கொள்கிறது. பின்வரும் காரணங்கள் இந்த அமைப்பைப் பாதிக்கின்றன.
  உடல் பருமன்
  இரைப்பையின் மேல் பகுதியில் வீக்கம்
  புகை பிடித்தல்
  கர்ப்பம்
  உலர் வாய்
  ஆஸ்துமா
  சர்க்கரை நோய்
  திசுக்களில் ஏற்படும் நோய்கள்
  மது அருந்துதல்
தொடர்ந்து அமிலம் வெளியேறும்போது உணவுக் குழாயின் உள் சுவர் பாதித்து, வீக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதில் இருந்து ரத்தக் கசிவு, உணவுக் குழாய் சுருக்கம் ஏற்படலாம்.
தவிர்க்க!
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிப்பு: அதிகப்படியான எடை வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும்.  இந்த அழுத்தத்தின் எதிர்மறையாக, அமிலம் உணவுக் குழாய்க்கு வருகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
இறுக்கமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்: இடுப்பில் இறுக்கமாக உடை அணியும்போது அதுவும் அழுத்தத்தை அதிகரிக்கும்.
உணவு: கொழுப்பு நிறைந்த, வறுக்கப்பட்ட உணவுகள் நெஞ்சு எரிச்சலைத் தூண்டுகின்றன. மது, தக்காளி சாஸ், சாக்லெட், பூண்டு, வெங்காயம், காஃபின் பொருட்கள் ஆகியவை நெஞ்சு எரிச்சலைத் தூண்டலாம்.
குறைவாக உட்கொள்ளுதல்: அதிக அளவில் வயிறு புடைக்கச் சாப்பிடுவதற்குப் பதில், சிறிது சிறிதாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கம்: சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. உணவு உண்ட பிறகு குறைந்தது மூன்று மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.
படுக்கையின் அளவு: படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தலைப்பகுதியை 6 முதல் 9 இன்ச் அளவுக்கு உயர்த்துங்கள். 
சிகரெட்: சிகரெட் புகைப்பது உணவுக் குழாயின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

எடை குறைப்பு சாத்தியம்


'கணிசமான அளவு எடையைக் குறைத்துவிடலாம்’ என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாக விதைக்கவேண்டும். 'என்னால் முடியுமா?’ என்ற கேள்வியோடு வருபவர்களுக்கு, முடியும் என்ற நம்பிக்கையை வரவழைப்பதுதான் மிகவும் முக்கியம். தினமும் என்ன சாப்பிடுகிறோமோ, அதை சாப்பிட்டுக்கொண்டே எடையைக் குறைக்கலாம். அதுதான் சாத்தியம்கூட.  எடையைக் குறைக்க காலை உணவு அவசியம். ஆனால், இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய், சுக்கு, தனியா, குடமிளகாய், புரோகோலி, பாலக், கோஸ், வெங்காயம், பூண்டு, செலரி போன்றவை, கொழுப்பைக் குறைக்க உதவும். அடர் நிறங்கள் கொண்ட, வெவ்வேறு நிறக் காய்கள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை (ஜீனி), மைதா, சாஃப்ட் டிரிங்க்ஸ், பேக்கரி தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். அல்லது அறவே ஒதுக்க வேண்டும்.
நான் தந்துள்ள 'ஐடியல் டயட் சார்ட்’ முறையில் சாப்பிடுங்கள் (இது பொதுவானது. அவரவர் விருப்பம் மற்றும் உடல்நிலைக்கேற்ப இது மாறும்). மாதத்துக்கு 4 கிலோ எடையை கண்டிப்பாகக் குறைக்கலாம். கூடவே, வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறையும். கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு வரும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு கூடி, கெட்ட கொழுப்பின் (HDL) அளவு குறையும்.
சரியான விகிதத்தில், சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி. எல்லாவற்றையும்விட மேலாக, ஸ்ட்ரெஸ்’ இல்லாத வாழ்க்கைமுறை இருந்தால் போதும். எளிதில் குறைக்கலாம் எடை!
ஐடியல் டயட் சார்ட்!
 காலை எழுந்ததும், காபி, டீ அருந்துவதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு. அடுத்ததாக சிறிது கிரீன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்காத காபி / டீ.
 காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது கீரை / காய் ஸ்டஃப் செய்த தோசை. தொட்டுக்கொள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லி சட்னி (தாளிக்காமல்) அல்லது சாம்பார். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கரு. (குறிப்பு: கோதுமை மாவு அரைக்கும்போது, ஒரு கிலோ கோதுமைக்கு 100 கிராம் சோயா சேர்த்து அரைப்பது நல்லது.)
 முற்பகலில், வெண்ணெய் எடுத்த மோர் ஒரு கிளாஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸ் அல்லது இளநீர் அல்லது காய்கறி சூப் ஒரு பவுல்.
 மதிய உணவுக்கு, அவரவர் கை அளவுக்கு நான்கு கைப்பிடி அளவு சாதம். பூசணி, பீர்க்கை, புடலை, சுரைக்காய், காலிஃப்ளவர்  ஏதாவது காய்கறி கூட்டு. ஏதேனும் ஒரு கீரை.
 பிற்பகலில் லோ கிளைசமிக் இண்டெக்ஸ்’ கொண்ட சோயா, ராஜ்மா, சிறிய கறுப்பு கொண்டைக்கடலை  இவற்றில் ஏதாவது ஒரு சுண்டல்  2 கைப்பிடி அல்லது வறுத்த சோயாபீன்ஸ் 2 கைப்பிடி.
 இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கு முன், காளான், காய்கறி அல்லது தக்காளி சூப் 2 பவுல். ஒரு மணி நேரம் கழித்து, பப்பாளி, ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம். அதனுடன், காய்கறிகள் சேர்த்த சாலட் ஒரு பவுல்.
உடற்பயிற்சி:
 தினமும் 25 நிமிடம் யோகப்பயிற்சி, கூடவே மூச்சுப்பயிற்சியும் முக்கியம். அதுமட்டுமின்றி, பொதுவாக எப்போதுமே நிற்கும்போதும், நடக்கும்போதும் பேசும்போதும் வயிற்றை உள்ளிழுத்தபடியே இருந்து பழகவேண்டும். அதுவே ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதனால் வயிற்றுத் தசைகள் டோன்’ ஆகி, தொப்பை குறையும்.

சின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்

கண் பார்வை திறன் அதிகரிக்க...
7 பாதாம், 2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கற்கண்டு ஆகியவற்றைப் பொடிசெய்து பாலில் கலந்து, இரவில் குடித்துவர, பார்வைத் திறன் அதிகரிக்கும். இதைக் குடித்த பிறகு, வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. ஒரு கப் இளஞ்சூடான பாலுடன், 1/2 ஸ்பூன் அதிமதுரப் பொடி, 1/4 ஸ்பூன் வெண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் குடித்துவர, கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
இயற்கை பற்பொடி...
கோதுமை தவிட்டை எரித்து, அதன் சாம்பலோடு, உப்பு, சர்க்கரை கலந்து பல் தேய்த்தால், பற்கள் பளபளப்புடன் இருக்கும். இதில் சர்க்கரையின் அளவு உப்பைவிட அதிகமாக இருக்கலாம். வேப்பங்குச்சிப் பொடி, புதினாப் பொடி, எலுமிச்சைப் பொடி, சர்க்கரை, உப்பு, லவங்கம், ஜாதிபத்திரி இவற்றைக் கலந்து பல் தேய்த்தால், பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது.
முடி வளர்ச்சிக்கு...
தேங்காய் எண்ணெய், லாவண்டர் எண்ணெய் 25 துளிகள், ரோஸ்மெரி எண்ணெய் 2 துளிகள் கலந்து கூந்தலில் தடவிவந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
நல்ல கொழுப்பு அதிகரிக்க...
இரவு, இரண்டு பாதாம்களை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டுவந்தால், நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து, இதய நோய் வராமல் காக்கும்.
நகங்கள் அழகாக...
கடுகு விழுதுடன், வெண்ணெய் சேர்த்து நகங்களில்  தடவிவர, நகங்கள் பளபளப்புடன் அழகாக இருக்கும்.
சளித் தொலைக்கு...
ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அரை லிட்டர் நீரில், நறுக்கிய அரை கப் வெண்டைக்காயைப் போட்டு, பாத்திரத்தை மூடிக் கொதிக்கவிடவும். ஒருநாளைக்கு இருமுறை ஆவி பிடிக்க, சளி குறையும்.
ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ்
தக்காளியில் இயற்கையாகவே ஆன்டிசெப்ட்டிக் உள்ளது. இரவில், தக்காளி விழுதை ப்ளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, மறுநாள் கழுவுங்கள். அதுபோல தேனையும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

Monday, August 10, 2015

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!


''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்'  இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.
யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம்.
"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.
ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" என்கிறார் சாய் கிஷோர்.
வைட்டமின் அதிகரிப்பதால்  வரும் பிரச்னைகள்
  வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் தேவை. இதற்கும் அதிகமாக இந்த வைட்டமின் நம் உடலில் சேரும்போது 'ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்னைகளில் தொடங்கி அதிகப்படியான வைட்டமின்கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
  வைட்டமின் டி
எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்் தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், 'ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.
  வைட்டமின் இ
 இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது,  ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.
  வைட்டமின் கே  
ரத்தம் உறைதலுக்கு இந்த வைட்டமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது 'ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் (ANTI COAGULANTS) மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.
சென்னை 'க்வா நியூட்ரிஷன்' அமைப்பைச் சேர்ந்த உணவியல்
நிபுணர் கிருத்திகா ராஜன் தரும் வைட்டமின் டிப்ஸ்:
  வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல்,  மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத்  தவிர்க்கலாம்.  
   பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
   சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
  நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.  
   வைட்டமின் இ மிகச் சிறந்த 'ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
   உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

Sunday, August 9, 2015

வாழை, பப்பாளி


ல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்.
வாழைப்பழம்
  உடல் எடையை ஏற்ற நினைப்போருக்கு வாழை சிறந்தது.
  கலோரிகள் நிறைந்தது. எந்த வேளையில் சாப்பிட்டாலும் உடனடி ஆற்றலைத் தரும்.
  உடல் எடை குறைந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திலிருந்தே கொடுக்கலாம்.
  பொட்டாஷியமும் மக்னீசியமும் நிறைந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தைப் பலப்படுத்தும்.
  எலும்பு வளர்ச்சிக்கும் உதவும். எலும்பு தேய்மானம் அடையாமல் தடுக்கும்.
  குடல் தொடர்பான பிரச்னை, வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
  வாழையில் டிரிப்டோபேன் (Tryptophan) என்ற கூட்டுப்பொருள் செரட்டோனினை தூண்டச் செய்து, அமைதியான மனநிலையை உருவாக்கும்.
  பெக்டின் (Pectin) என்ற நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை குணமாகும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
தினமும், அனைத்து வயதினரும் சாப்பிட வேண்டிய பழம் இது. ஒரு நாளைக்கு 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.
சாப்பிடும் முறை?
  தனியாகச் சாப்பிடலாம், மிளகு தூவி சாப்பிடலாம்
  ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்
  நல்ல செரிமானச் சக்தியுடையோர் மட்டும், வாழைப் பழ மில்க்க்ஷேக் செய்து சாப்பிடலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
  கறுப்பு, பிரவுன் நிறப் புள்ளிகள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
  மிதமான அளவில் பழுத்தவையே, சாப்பிட உகந்தது.
  வாங்கும்போதே, பாதிக் காயாகவும் பாதிக் கனியாகவும் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், ஒரே நாளில் பழுத்து  வீணாகிவிடும். 45 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை.
பப்பாளி
  சருமத்துக்கு நண்பன். பருக்கள், சருமத் தொற்றுப் பிரச்னைகளை நீக்கி, சருமத்தின் நிறம், தன்மையைப் பாதுகாக்கும். தொடர்ந்து சாப்பிடுவது, சருமத்தில் பூசுவதன் மூலமே பலன் கிடைக்கும்.  
  நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும். ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால், இளமையைத் தக்கவைக்கும். மலச்சிக்கலைப் போக்கும், செரிமானத்துக்கு உதவும். இறைச்சி சமைக்கும்போது அதில் பப்பாளிக்காயைச் சேர்த்தால், இறைச்சி மிருதுவாகவும், எளிதில் செரிக்கவும் உதவும்.
  குறைந்த கலோரி என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
  காலை எழுந்தவுடன் மூச்சுத்திணறல், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னை இருப்பவர்கள், தினமும் ஒரு துண்டுப் பப்பாளி சாப்பிடலாம்.
  மூட்டு வலி மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். உடலில் எதிர்பாற்றலைக் கூட்டும். மாதவிலக்கு பிரச்னையைத் தீர்க்கும். சீரற்ற சுழற்சியைச் சரியாக்கும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
வாரத்தில் மூன்று முறை, அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.  அளவு 50 75 கிராம் வரை இருக்கலாம்.
சாப்பிடும் முறை...
 தனியாகவும் சாப்பிடலாம். எலுமிச்சை சாறைப் பிழிந்தும் சாப்பிடலாம்.
 ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
 பாதி மஞ்சள் நிறமாகவும் பாதி பச்சை நிறமாகவும் வாங்க வேண்டும்.
 பப்பாளியின் காம்பு மஞ்சளாக இருந்தால், அதை வாங்கிச் சென்ற சில நாட்களில் பழுக்கும். பச்சையாக இருந்தால், பப்பாளி பழுக்காது.
 விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்க்கும்போது, மிருதுவாக இருந்தால், அவை பழுத்தவை. கடினமாக இருந்தால், அது பழுக்காத காய்.

மஞ்சளின் மருத்துவகுணம்!


பொங்கல் பண்டிகையில் முதன்மைப் பொருள், மஞ்சள். மங்களகரமான மஞ்சளில் மருத்துவ குணங்களும் அதிகம்.  சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான நோய்களில், 60க்கும் மேற்பட்ட நோய்கள் மஞ்சளால் குணப்படுத்தப்படுகின்றன. மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப் பொருள் என்பதால் விவசாயத்திலும் பயன்படுகிறது. கிடைக்க அரிதான கருமஞ்சள், காயகல்ப மருந்தாகப் பயன்படுகிறது.
 பசுஞ்சாண நீரில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள் சமையலுக்கும், நல்லெண்ணெயில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள், சருமத்துக்கும் பயன்படுகிறது.
 மெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.
 மஞ்சளைச் சுட்டு, புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோவை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு, தொண்டைப்புண் மற்றும் கிருமித்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.
 மர மஞ்சளின் சாறு 200 மி.லி அளவு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை என, ஒரு வாரம் தொடர்ந்து குடித்துவர, மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.  
 அரை லிட்டர் நீரில் கைப்பிடியளவு மஞ்சளைச் சேர்த்து, 200 மி.லி அளவுக்குக் காய்ச்சி, தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து, 2 வேளை குடித்துவர வெள்ளைப்படுதல், பெரும்பாடு நோய் குணமாகும்.
 2 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து, கொதிக்கவைத்து, அரை கப் அளவாகக் குறுக்கியதும், வடித்துக் குடித்தால், பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட, நச்சு நீர்க்கட்டுக்களை வெளியேற்றும்.
 பசுமஞ்சள் சாறுடன், நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட, அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சமஅளவு கலந்து, அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டாலும் சரியாகும்.
 பூசு மஞ்சளை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தோல் நோய் அண்டாது.
 கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.

சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..


பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள். கேட்டால், ''சைனஸ் பிரச்னைங்க, தீரவே இல்ல'' எனக் கவலையோடு சொல்வார்கள். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது?
சைனஸ் என்றால் என்ன?
நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை  மூக்கு, கன்னம்  மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பிரச்னை எப்படி வருகிறது?
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு  ( Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு 'சைனசிட்டிஸ்’ (Sinusitis) என்று பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் 'பாலிப்’ (Polyp) எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது. பெரும்பாலும்  சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்னை வருகிறது.
சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?
  கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
  தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.
  அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும்.
  மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.
  இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.
  பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும்.
  காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
யூக்லிப்டஸ் எண்ணெயைக் கலந்து, நீராவி பிடிக்கலாம், தைலம் தடவலாம். தும்மலைத் தடுக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு ஸ்டீராய்டு கலந்த ஸ்ப்ரே  பயன்படுத்தலாம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு கலந்த சொட்டு மருந்துகளை மூக்கினுள் விட வேண்டாம்.
இந்த சிகிச்சைமுறைகளில் சரியாகவில்லை எனில், எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக சைனஸ் பகுதியில் உள்ள திரவம் அப்புறப்படுத்தப்படும். எலும்புப் பகுதி, சதைப் பகுதியில் பிரச்னை இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், உடனே பலன் இருக்காது. தொடர்ந்து, ஓரிரு வருடங்களுக்கு, மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை மருந்துகளைச் சாப்பிடவேண்டும்.  சைனஸ் பிரச்னை வருவதற்கான அறிகுறி அறிந்து, பிரச்னை பெரிதாகாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்.
சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்!
  பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.
  படுக்கை, தலையணை, படுக்கையறை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும். தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து, மாற்றவும்.
  கைக்குட்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்துப் பயன்படுத்தவும். கைக் குட்டையை அடிக்கடி மாற்றவும்.
  நூல் மற்றும் கயிற்றுத் துகள்கள் பரவியிருக்கும் இடங்கள், புகை, ஒட்டடை, சிமென்ட் இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
  இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
  சைனஸ்  பிரச்னை உள்ளவர்கள், செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம். வீட்டில் கரப்பான் பூச்சி பெருகவிடாமல் தடுக்க வேண்டும்.
  அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறிந்து, அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  மூக்குப்பொடி போடுவதையும்,புகை பிடிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.