Wednesday, October 28, 2015

உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்...


உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள்.

இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க  ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம் ., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அவை ஒருவருக்கு தேவையான உடல் எடையைப் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த பழங்களை உடல் எடையை குறைக்கத் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இந்த பழங்களானது ஒருவரின் உயரத்திற்கு தேவையான உடல் எடையைப் பெறவும் உதவியாக இருக்கும். இங்கு உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

வாழைப்பழத்தில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இவற்றை உடல் எடையை குறைக்க நினைப்போர் சாப்பிடக்கூடாது. ஆனால் உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு இது ஒரு அருமையான பழம்.

உலர் பழங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள். ஆனால் இவற்றை எடையைக் குறைப்போர் டயட்டில சேர்க்கக்கூடாது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு கோடைக்காலம் தான் சிறந்தது. ஏனெனில் பழங்களின் அரசனான மாம்பழமானது கோடையில் விலை மலிவில் அதிகம் கிடைக்கும். இந்த மாம்பழத்திலும் கலோரிகள் எண்ணற்ற அளவில் உள்ளது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சப்போட்டாவிலும் கலோரிகள் வளமாக உள்ளது. இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம். ஆனால் இதனை அவ்வப்போது சாப்பிட்டால், எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.

அத்திப்பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு பழத்தில் 111 கலோரிகள் இருக்கும். எனவே எடையை குறைக்க நினைப்போர் இதனை டயட்டில் சேர்க்கவேக்கூடாது. ஆனால் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு, இது ஒரு சூப்பரான பழம்.

எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5 பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது.

Thursday, October 1, 2015

செரிமான கோளாறை சரிசெய்யும் பரங்கிக்காய்

செரிமான கோளாறை சரிசெய்யும் பரங்கிக்காய்

மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். 

• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது. 

• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. 

• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. 

• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். 

• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். 

• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. 

• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது. 

• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. 

• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

மூலநோய்க்கு மருந்தாகும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

மூலநோய்க்கு மருந்தாகும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

பொதுவாகக் காய், கனிகள் தமக்குள் உடலுக்குப் புத்துணர்வு தந்து சோர்வினைப் போக்கக் கூடிய பல்வேறு சத்துப்பொருட்களை உள்ளடக்கியுள்ளன. இந்த சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கின்றன. காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன. 

உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன. பச்சைக் காய்கறிகள் ரத்த நாளங்களில் குறிப்பாக இதயத்தைச் சார்ந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு என்கிற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு மட்டுமின்றி சில புற்று நோய்களையும் தடுக்க முடிகின்றது. காய்கறிகள் மிகக் குறைந்த எரிசக்தியைக் கொண்டுள்ளன. இதனால் உடல் எடை கூடாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள இயலுகிறது.  

மேலும் இது இரண்டாம் வகை சர்க்கரை நோயையும், புற்று நோய்களையும் இதயம் மற்றும் இதய நாளங்களில் ஏற்படும் நோய்களையும் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றதாகவும் விளங்குகிறது.  பீர்க்கங்காய் மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஓர் கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பீர்க்கங்காய் ஓர் மலமிளக்கியாக மட்டுமின்றி வயிற்றைக் கழியச் செய்வதாகவும் விளங்குகிறது. சிறுநீரைப் பெருக்கிச் சீராக வெளித்தள்ள வைப்பது, வீக்கங்களைக் கரைக்க உதவுகிறது. 

மண்ணீரலின் வீக்கத்தை தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் நோயைத் தணிக்க வல்லது. பீர்க்கங்காயின் விதைகள் வாந்தியைத் தூண்டக் கூடியது. சளியை உடைத்துக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது. ஹோமியோபதி மருத்துவத்தில் இதன் சாறு வலப் பாட்டீரல் மற்றும் இடப்பாட்டீரல் ஆகிய வற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் உணவுப் பாதையின் உட்புறப் பூச்சு போல விளங்கும் மென் தசைகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்கு வதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகின்றது.  

மத்திய சித்த ஆயுர்வேதக் கழகம் பீர்க்கங்காயின் இலைச் சாறு, காய்ச் சாறு, வேர்ச் சாறு இவற்றை 10 முதல் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்கின்றது. இதுமட்டுமின்றி பீர்க்கங் காய் உள்ளழலாற்றி (டிமல்சன்ட்) ஆகவும் சிறுநீர்ப் பெருக்கி ஆகவும் சத்துள்ள உணவாகவும் பயன்படுகின்றது. பீர்க்கங்காய் ஓர் சத்தான உணவாவது மட்டுமன்றி அதில் நிறைய நார்சத்து பொதிந்துள்ளது. விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது. 

பீர்க்கங்காய் இனிப்புச் சுவை யுடைது என்பதும் மட்டுமின்றி எளிதில் சீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. குறைந்த அளவு எரி சக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்த உணவாகின்றது. பீர்க்கங்காய் மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு ஓர் நல்ல உபகரணமாக உதவுகின்றது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் இதற்கோர் முக்கிய காரணமாகும். 

பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் மருந்தாக உதவுகின்றது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப் பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்தாக அமைகின்றது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து சலித்து வைத்துக் கொண்டு மூக்குப் பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் என ஆயுர் வேதம் குறிப்பிடுகின்றது. பீர்க்கங்காயில் ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. இதனால் ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்பட உதவுகின்றது. 

மது அருந்துவோர்களுக்கு மது வினால் ஏற்பட்ட குருதிக்கேடு, சீர்படுத்தப்படும் வகையில் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவை இன்சுலின் ஆல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இவ்வேதிப் பொரு-ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன. 

பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் முற்றிய காய்ந்த நிலை நிறைய கூடு போன்ற நார்ப் பகுதியைப் பெற்றுள்ளது. இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பது என்பது பன்னெடுங் காலமாகப் பழக்கத்தில் உள்ளது. இப்படிக் குளிப்பதால் தோலின் மேற்பகுதியில் உள்ள இறந்து போன மேற்புறச் செல்கள் அத்தனையும் துடைத்து சுத்தப்படுத்தப்பட்டு தோல் ஆரோக்கியத்தையும் மென்மையையும், பளபளப்பான தன்மையையும் அடைகின்றது. 

பீர்க்கங்காயில் உள்ள ரத்தத்தைப் தூய்மை செய்யக் கூடிய வேதிப்பொருள்களால் தோலின் மேலுள்ள முகப் பருக்கள் ஆகியன விரைவில் குணமாக ஏதுவாகின்றது. உடலின் மேலுள்ள துர்நாற்றத் தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவாக உண்பதால் நோய் எதிர்ப்பு- சக்தியைத் தர வல்லதாக விளங்குகிறது. 

பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகிய குற்றங்கள் குணமாகும். 

பீர்க்கங்காய் மருந்தாகும் விதம் :

* ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும். 

* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது. 

* பீர்க்கங்காய் ஒன்றைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இரு வேளை பருகி வருதலால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். 

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இருவேளை குடித்து வருதலால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் குணமாகும். 

* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து- சேர்த்து தொழு நோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருதலால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும். 

* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும். 

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வெருகடி அளவுக்கு எடுத்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு சுத்திகரித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வருதலால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும். 

* பீர்க்கங் கொடியின் இலை யைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும். 

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள் குணமாகும். 

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.  

* பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருதலால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.  

* பீர்க்கங்காய் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல்கள், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இறுத்திப் பயன்பெறுவோம்

பித்தம் உடலுக்கு நன்மை செய்யுமா

பித்தம் உடலுக்கு நன்மை செய்யுமா?

பித்தம், லேசான எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் வீரியம் மிக்கது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்துப் போவது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், ரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டது. 

உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை சீரணிக்கச் செய்வது அதுதான், உடலுக்குத் தேவையான வெப்பம், ஆசை, பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப் பாதுகாக்கிறது. ஆனால், இதே பித்தம் அதிகமாகி விட்டால் தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்பு சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:- 

பாசக பித்தம்:-
இரைப்பை, ஜீரணப்பை இவற்றின் நடுவில் இருக்கிறது. இது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி‘ என்ற பெயரும் உண்டு. உணவை செரிக்கச் செய்து, அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன் இடத்திலிருந்தே ஊட்டமளிக்கிறது. 

ரஞ்சக பித்தம்:
இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு, அதிலுள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது. 

சாதக பித்தம்: 
இது இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தன்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவற்றைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது. 

ஆலோசக பித்தம்: 
இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது. 

பிராஜக பித்தம்: 
சருமத்தை உறைவிடமாகக் கொண்டு, சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து, அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது. காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோசா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. பித்தத்தைக் கட்டுப்படுத்த, இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.