Tuesday, July 21, 2015

பிரமர முத்திரை


செய்முறை :

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக நேரத்தின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பயன்கள் :  மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள், சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.  நிம்மதியான உறக்கம், நல்ல செரிமாணம் தருவதற்கும் இம்முத்திரை பயன்படும்.

Monday, July 20, 2015

அலர்ஜி




அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. 

மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது. 

பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

பாதுகாப்பு முறைகள்:

* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.

* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது. 

* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும். 

* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம். 

* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும். 

* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம். 

* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது. 

* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம். 

* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம். 

* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.  

* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.

Sunday, July 19, 2015

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?


1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைகாய் 

4. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 

5. தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்). 

6. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும் 

7. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

8. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும் 

9. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும் 

10. பீர்க்கங்காய் : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது 

11. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும் 

12. கருணை கிழங்கு: முழுவதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள்புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும் 

13. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும் 

14. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும் 

15. கத்திரிக்காய்: தோல் soft ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும் 

16. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம் 

17. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம் 

18. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது 

19. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம் 

20. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு. நல்ல காய் 

21. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும். 

22. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும். 

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்


இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. 

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. 

தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. 

உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

பல் வலிக்கு வீட்டில் இருக்கு மருந்து



நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். 

பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். 

கடுகு எண்ணெய், பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். 

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும். நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மலட்டுத்தன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் வாழைப்பூ



தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைப்பதில்லை.

இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன.

வாழைப்பூ

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி குறையும்.

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

Thursday, July 16, 2015

தேங்காய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லதா?



தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல்  40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். 

அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு. அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. 

கூடிய வரை  கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து  விடுகிறோம். வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். 

அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான். சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி,  கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். 

கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம்  எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி  சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும்.

அல்சர் உள்ளவர்களுக்கான உணவுப் பட்டியல்



''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்சனைக்கும் மூல காரணம், முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு  சாப்பிடாமல் இருப்பது, உணவைத் தள்ளிப்போடுவது, அதிகமான இடைவெளிவிட்டுச் சாப்பிடுவது போன்ற சீரற்ற உணவுப் பழக்கங்களால் அல்சர் வரலாம். 

இப்போது அல்சர், அசிடிட்டியை விட, அதிகமான அளவில் மக்களைப் பாதித்து வரும் பிரச்சனை, 'நெஞ்சைக் கரித்தல்’ அல்லது 'எதுக்களித்தல்’தான். உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலேறி வருவதுதான், 'நெஞ்சைக் கரித்தல்’ என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்கள், ஏதேனும் ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் விடுவது மற்றும் டென்ஷன்தான். அல்சர் வந்துவிட்டால், உடனடியாக உணவுப் பழக்கத்தைச் சீராக்க வேண்டும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, காரம் மற்றும் மசாலா இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதும்''. 

* காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ. 

காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.) 

* 11 மணி: புளிக்காத மோர். 

* மதிய உணவு: நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி. 

* மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள். 

* இரவு:  இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம். 

சேர்க்க வேண்டியவை:

* மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது. 

* கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க்காய்கள். 

* காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம். 

* தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும். 

* நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும். 

* எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.  இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம். 

தவிர்க்க வேண்டியவை: 

* வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

* பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறை


பொதுவாக உடலில் கொழுப்புக்கள் சேர்வது உணவுகளால் தான். இத்தகைய கொழுப்புக்கள் உள்ள உணவுகளை உண்டால், இதய நோய் எளிதில் வந்துவிடும். எனவே கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் இருந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கலாம். 

கொழுப்பை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டுமானால், அதிக நார்ச்சத்து உள்ள உணவான, அதிகம் சுத்திகரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட ரொட்டி போன்றவற்றை உண்ண வேண்டும். கூடுதலாக அதனுடன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராளமாக உண்ண வேண்டும். இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும். அதிக கலோரிகள் உடலால் இயற்கையாகவே கொழுப்பாக மாற்றப்படுகின்றன. 

அதிக கொழுப்புள்ள உணவை உண்டால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும். ஒருவர் தன் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ விரும்பினால், அவர்கள் உணவில் முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளுடன் கூடுதலாக பழங்களையும் உண்ண வேண்டும். 

இந்த உணவுகளில் கொழுப்பின் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. இந்த உணவுகளில் இயற்கையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவு வகைகளில் மீனை தாராளமாக சேர்க்கவும். உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பை நீக்க உதவும் சத்தான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சுறா, சால்மன் மற்றும் சூரை வகை மீன்களில் உள்ளன. எனவே முடிந்த அளவு மீனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. 

மேலும் இறைச்சி உணவை தவிர்க்க முடியாதவர்கள், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியை உண்ணலாம். ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும், 3 முதல் 5 முறை காய்கறி வகைகளையும், 2 முதல் 4 முறை பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள முடியும்.

சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாமா?



உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனித்து வாங்கி உபயோகிக்க வேண்டும். பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. 

இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது. சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன், லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது. 

பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.

Wednesday, July 15, 2015

முதுமையை விரட்டி என்றும் இளமையாக காட்சி தர உதவும் நெல்லிக்காய்



நெல்லிக்கனி சோகையைப் போக்கக் கூடியது, திசு வளர்ச்சி, தசை வளர்ச்சிக்கு உதவக் கூடியது. வாந்தியைத் தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. வற்றச் செய்யும் தன்மை வாய்ந்தது. ரத்தக் கசிவைக் குணப்படுத்தக் கூடியது. பேதியைக் கட்டுப்படுத்தக் கூடியது. சிறுநீரைப் பெருக்க வல்லது. 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லது. அகட்டுவாய்வகற்றி, சோர்வினைப் போக்க வல்லது. மஞ்சள் காமாலை, பசியின்மை, சீதபேதி, கண் பார்வைக் கோளாறு ஆகியவற்றுக்குகு மருந்தாகிக் குணம் தருவது மட்டுமின்றி சீரண உறுப்புகளுக்கு பெரும் பலமாக அமைவது. நெல்லியின் இலை பித்தத்தைப் போக்கவல்லது, ஆஸ்துமா என்னும் இரைப்பு நோயைத் தணிக்கக் கூடியது.

நெஞ்சகச் சளியை நீக்க வல்லது. நெல்லிமரப்பட்டை வற்றச் செய்யும் தன்மையுடையது. நெல்லி இலைச்சாறு வாந்தியை நிறுத்தவல்லது. நெல்லி அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தவல்லது. நெல்லிக்கனியில் அபரிமிதமான விட்டமின் சி சத்து அடங்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி தாது உப்புக்கள், அமினோ ஆசிட்டுகள் ஆகியவையும் மிகுதியாக இருக்கின்றது. நெல்லியின் சதைப் பகுதியில் புரதச்சத்தோடு விட்டமின் சி சத்து என ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு சத்துக்களும் செரிந்துள்ளன. 

மேலும் ஆப்பிளை விட பன்மடங்கு தாது உப்புக்களையும் அமினோ ஆசிட்களையும் அதிகமாகப் பெற்று விளங்குகிறது. நெல்லியில் உள்ள பில்லெம்பின் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மனித உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் உளைச்சலைப் போக்குவதோடு, கடுப்போடு கூடிய வலியையும் தணிக்கும் குணம் வாய்ந்தது. நெல்லி இலைகளில் கேலிக் ஆசிட் என்னும் அமிலச்சத்தும் அடங்கியுள்ளது. ஒரு கிராம் காய்ந்த நெல்லியில் 10.8 மி.லி. சாலிக் அமிலம் உள்ளது. 

மேலும் அஸ்கார்பிக் என்னும் ஆசிட் என்னும் விட்டமின் சி உடன் மூசிக் அமிலம் என்னும் மருத்துவப் பொருளும் பொதிந்துள்ளது. நெல்லிக் காயில் சூப்பர் ஆக்ஸைட்டிஸ் முடேட்ஸ் 482.14 அளவு/ கிராம் உள்ளது. இந்த வேதிப் பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமையைத் தக்க வைக்க உதவுகின்றது. நெல்லிச் சாற்றில் இருக்கும் சாலிக் ஆசிட் சோர்வு போக்க கூடியதாக உதவுகின்றது. 

நெல்லிக் கனியும் சாறும் ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தையும் குறைத்திட கொழுப்புச் சத்தையும் ட்ரைகிளிரைட்ஸ் என்னும் கொழுப்புச் சத்தையும், பாஸ்போலிபிட்ஸ் என்னும் கொழுப்புச் சத்தையும் குறைக்க வல்லது. மேலும் உயர் திட கொழுப்புச் சத்தை பாதிக்காமல் நிலைப்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பபட்டு இதயம் சீராக இயங்க உதவுகின்றது. 

நெல்லிக்காய் பற்றி இந்திய மருத்துவம்: 

* நெல்லி விதையைப் பொடித்து உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். உடலின் வெப்பத்தைக் தணித்து குளிர்ச்சியுண்டாக்கவும், பித்தத்தை தணிக்கவும் வாந்தியைப் போக்கவும் இதன் விதையைப் பொடித்துப் கொடுப்பதுண்டு. 

* நெல்லி விதையைத் தீ நீராக்கி காய்ச்சலைத் தணிக்க கொடுப்பதுண்டு. மேலும் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் நெல்லி விதையைத் தீ நீராக்கி கொடுப்பர். 

* இலைகளை நீரிலிட்டு ஊற வைத்து எடுத்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதற்கு உபயோகிப்பர். கண்ணோய்கள் பலவும் இதனால் குணமாகும். 

* நெல்லி மரத்தின் வேர்ப் பட்டையைச் சூரணித்து நன்கு சலித்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்து நாப்புண், வாய்ப்புண்களுக்குத் தடவி வர விரைவில் குணமாகும். 

* நெல்லி மரப்பட்டை சூரணத்தை அதிசார பேதிக்கு (நீராய் வெளியாகும் கழிச்சல்) கொடுக்க அதிவிரைவில் குணம் உண்டாகும். 

* நெல்லி இலைக் கொழுந்தை அரைத்து மோரில் கொடுக்க சீத பேதி குணமாகும். 

* நெல்லி வேரினால் வாந்தி, வாய்ச்சுவையின்மை, முத்தோஷக் கோபம் (வாத, பித்த, சிலேத்தும சீற்றம்) மலச்சிக்கல், காய்ச்சல், சன்னிதோஷம் ஆகியன போகும். 

* நெல்லி இலைக் கசாயத்தை தயார் செய்து ஆற வைத்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் ஆறிவிடும். 

* நெல்லி மரப் பூக்களை சேகரித்துக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு உள்ளுக்குக் கொடுப்பதால் உடல் வெப்பம் தணிவதோடு மலச்சிக்கலும் மறைந்து போகும். 

* நெல்லி மர வேரினின்று தயாரிக்கப்படும் நெல்லிப் புளிப்பு (காடி) காமாலை, இருமல், குன்மம் இவற்றைப் போக்கும். 

* நெல்லி இலையை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரை தெளிவாகக் கொண்டு உடன் சோம்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கிராணிக் கழிச்சல் என்னும் நீர்த்தபேதி நீங்கிப் போகும். 

* நெல்லிக்காயை இடித்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சிய தைலத்தை தலைக்குத் தடவி வருவதால் கூந்தல் கருமையும், செழுமையும், மென்மையும், அடர்த்தியுமாக வளர வழி செய்யும். 

* நெல்லி வற்றலை சூரணித்து உள்ளுக்குக் கொடுப்பதால் மலச்சிக்கல் மறைந்து போவதோடு- சீரண உறுப்புகளையும் சீர்செய்து பலப்படுத்தும். 

* நெல்லி மர வேரை உலர்த்தி இடித்து சூரணித்து அதனோடு மேல்தோல் நீக்கிய எள்ளையும் சேர்த்துச் சாப்பிட மூளை நரம்புகளுக்கு பலம் ஏற்பட்டு ஞாபக சக்தியை மேம்படுத்தும். மூளையின் உறுப்புகளை பலப்படுத்த இது ஓர் சிறந்த மருந்தாகும். 

* நெல்லிக்காயை ஊறுகாய் இட்டு சாப்பிட மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலை சுற்றல், பைத்தியம், வாயில் நீர் அதிகம் சுரத்தல், மலச்சிக்கல், பிரமேகம் ஆகியன நீங்கும். 

* நெல்லி வற்றல் தீநீர் உடல் உஷ்ணம், பித்த மயக்கம், ஓக் காளம், குமட்டல், பசியின்மை முதலிய நோய்களை குணப்படுத்தும். 

* பச்சை நெல்லியை அரைத்து தொப்புளின் கீழ் பூசி வைக்க நீர்க்கட்டு உடையும். சிறுநீர் தாராளமாய் இறங்கும். 

* நெல்லிச் சாற்றோடு திராட்சை சாறு, தேன் கலந்து பருகுவதால் காய்ச்சல், அதி சாராபேதி, நாவறட்சி ஆகியன குணமாகும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ



ஆங்கிலத்தில் சாப்ரன் எனவும் ஹிந்தியில் கேசர் எனவும் அழைக்கப்படும் குங்குமப்பூ அதிசயமான ஒன்று. ஒரு பூவின் உலர்ந்த சிவப்பு நிற மகரந்த காம்பு உயர்ந்த வாசனையுடன் இருப்பது அனைவரையும் ஈர்க்கும் ஒன்று. ஆனால் இதனை மிக சிறிதளவு வாங்குவதற்கே பலமுறை யோசிக்க வைக்கும். விலை உயர்ந்த பொருள். 

ஒரு அவுன்ஸ் உயர்ந்த குங்குமப் பூ சுமார் 4500 ஊதாநிற பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்டுகின்றது. ஒரு பூவில் 3 மகரந்த காம்புகள் கிடைக்கும். இதனை சிறிதளவு உணவில் (பிரியாணி, மசாலா, பால், இனிப்பு வகை) சேர்த்தால் போதும், மிக உயர்ந்த நறுமணத்தினைக் கொடுத்து விடும். 

குங்குமப்பூவின் மருத்துவ பலன்கள்

* புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. 

* இலுப்பு, கர்ப்பப் பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும். 

* மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது. 

* வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது. 

* ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன. 

* குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. வயிற்றின் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் வலி, அசி டிடி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது. 

* குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி. 

* மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது. 

* உடற்பயிற்சி அதிகம் செய்வதால் உடலில் லக்டிக் ஆசிட் சேரும். இது உடலுக்கு சோர்வினையும், பாதிப்பினையும் உண்டாக்கும். குங்குமப் பூ லக்டிக் ஆகும் சேர்வினை நீக்குகின்றது. 

* ஈறுகளின் வீக்கம் குறைகிறது. 

* தூக்கமின்மை நீங்குகின்றது 

* கல்லீரல் புற்று நோய் கட்டுப்படுவதால் அரபு குடியரசு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அமீன் அவர்கள் தன் ஆராய்ச்சியில் கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தப் போக்கை நிறுத்தவும் இதனை உபயோகித்துள்ளனர். முறையான உதிரப் போக்கு மாத விலக்கின்போது ஏற்படவில்லை எனினும் இதனைக் கொடுத்துள்ளனர். தாய்பால் கொடுக்கும் தாய்கள் சிறிய அளவிலேயே குங்குமப் பூ எடுத்துக் கொள்ள வேண்டும். 

குங்குமப் பூ எண்ணெய்: 

சரும பாதிப்பு, இருமல் ஆகிய வற்றிக்கு இதனை பயன்படுத்தும் ஏதுவதாக கூறப்படுகின்றது. இருப்பினும் எதனையும் உள் மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது மருத்துவர் ஆலோசனையை கண்டிப்பாய் பெற வேண்டும். பொதுவில் பாலில் சேர்த்த குங்குமப் பூவினை குடிக்கும் வழக்கமே நம் நாட்டில் உள்ளது. 

குங்குமப் பூ சில எச்சரிக்கை: 

குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் 

* வாந்தி 
* மயக்கம் 
* வயிற்றுப்பிரட்டல் 
* பசியின்மை போன்றவை ஏற்படும். 
* கழிவுப் பொருள் வெளிப்போக்கில் ரத்தம் 
* சிறுநீரில் ரத்தம் 
* மூக்கில் ரத்தம் 
* தலை சுற்றல் 
* மஞ்சள் காமாலை போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படலாம். 

குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10-16 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ.

உடல் எடையை குறைக்கும் சுக்கு சூப்



காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான். அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில்  உடல் எடை குறைவதை காணலாம். 

தேவையான பொருட்கள் :
சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன் 
மிளகு -  ஒரு டீஸ்பூன் 
வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பரங்கிக்காய் - சிறிய துண்டு 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை :
• வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும். 

• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். 

• தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். 

• தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.